Saturday, February 2, 2008
seeman peti
மண்ணுக்காக, மக்களுக்காக சினிமாவில் இருந்து எழும் ஒரு கலகக் குரல் இயக்குநர் சீமானுடையது. அதிர வைக்கும் வசனங்கள், கோபாவேசமான காட்சிகள் என இவர் இயக்கிய தம்பி படம், பார்க்க வந்தவர்களை முறுக்கேற்றி அனுப்பியது. அனல் கக்கும் மேடைப் பேச்சினால் பெரியாரிய கொள்கைகளை நாடெங்கும் பரப்பி வருகிறார். ஒரு ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் கீற்றுவின் நேர்காணல் பகுதிக்காக சந்தித்தோம். கேள்விகளை முடிக்குமுன்னே பதில்கள் அவரிடமிருந்து சீறி வந்தன. சாதி, மதம், மொழி குறித்துப் பேசும்போதெல்லாம் அவரது குரல் கோபத்தின் உச்சத்தில் ஒலித்தது. இனி பேட்டியிலிருந்து.........நீங்கள் பிறந்த ஊர், உங்கள் ஆரம்ப கால வாழ்க்கை பற்றி?நான் பிறந்தது ராமநாதபுரம் மாவட்டம் பக்கத்தில் உள்ள அரணையூர் கிராமம். விவசாயம் தான் தொழில். ரொம்பவும் வறண்ட, வறுமையான பகுதி அது. வசதியானவங்கன்னு யாரும் அதிகமாக கிடையாது. படிச்சவங்க ரொம்ப கம்மி. எங்க பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம். அவர்கள் தான் எங்க ஊரில் பள்ளிக்கூடங்கள் கட்டினாங்க. ஐந்தாம் வகுப்பு வரை எங்க ஊரிலேயே படித்தேன். மேல்நிலைப்பள்ளி பக்கத்துலே உள்ள புதூரில் படிச்சேன். நான் பள்ளிப்படிப்பு முடித்த நேரத்தில் இளையான்குடியில் ஜாஹீர் உசேன் கல்லூரி வந்தது. அதனால் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே விளையாட்டில் அதிக ஆர்வமாக இருப்பேன். ஊரில் நடக்கிற தெருக்கூத்து, நாடகம் எல்லாத்தையும் உள்வாங்கிட்டு அதே மாதிரி பாடிக் காட்டுவேன். வீட்டில சொந்தக்காரங்க வந்தா என்னைப் பாடிக்காட்ட சொல்வாங்க. உற்சாகப்படுத்துவாங்க.பள்ளிக்கூடத்தில நடக்கிற பாட்டுப்போட்டி, பேச்சுப் போட்டிகள்ல கலந்துக்குவேன். நானா பாட்டெழுதி, நானே மெட்டமைச்சு பாடுவேன். இதையெல்லாம் நண்பர்கள் ரொம்ப ஆர்வமா கேட்பாங்க.நான் கல்லூரியில் படிக்கும்போது சினிமாவில் பாக்கியராஜ், டி,ராஜேந்தர் பிரபலமா இருந்த நேரம். என்னோட கலை ஆர்வத்தைப் பார்த்துட்டு நண்பர்களும், பேராசிரியர்களும், நீ சினிமாவுக்குப் போனா நல்லா வருவேன்னு சொல்வாங்க. அப்படித்தான் சென்னை வந்தேன்.சென்னையில் உங்களோட ஆரம்ப காலகட்ட வாழ்க்கை எப்படி இருந்தது?சென்னை வரும்போது எனக்கு வயசு 19. ஊரில் இருக்கிற வரைக்கும் பரமக்குடி, இளையான்குடி தாண்டி எதுவும் தெரியாது. கல்லூரி படிக்கும்போதுதான் மதுரை, ராமேஸ்வரத்துக்கு நண்பர்களோட போனேன், அதுவும் சினிமாப் பார்ப்பதற்குத்தான். அதனால் சென்னை வந்தபோது அந்த பிரம்மாண்டம் எனக்கு ரொம்ப பிரமிப்பாயிருந்தது.எங்க ஏரியாவுலே இருந்து யாராவது வந்து சினிமாவுலே சாதிச்சிருந்தா அவங்ககிட்டே உதவியாளரா சேர்ந்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அதனால நானே போராட வேண்டிய கட்டாயம்.அப்போ ‘என்றும் அன்புடன்’ பட இயக்குனர் பாக்கியநாதன் அறிமுகம் கிடைச்சது. இரண்டு பேரும் அறைத் தோழர்களானோம். அவரோட உதவியாலே சென்னையில் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடிஞ்சது. இப்படி நண்பர்கள் உதவியாலத் தான் எட்டு, பத்து வருஷம் சென்னையில் இருந்தேன். அதன்பிறகு இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். ‘ராசாமகன்’ என்கிற என்னோட கதையை படமா எடுத்தார். அது பெருசா போகலை. தொடர்ந்து ‘அமைதிப்படை’, ‘தோழர் பாண்டியன்’ படங்களில் இணை இயக்குநராக வேலை பார்த்தேன்.அதன்பிறகு என்னோட ‘பசும்பொன்’ கதையை நானே படமாக்கலாம்னு முடிவு செய்தப்போ, ‘ரொம்பவும் சின்னப் பையனா இருக்கானே’ன்னு எல்லோரும் தயங்கினாங்க. அப்புறம் அந்தக் கதையை நானே இயக்குறேன்னு இயக்குனர் பாரதிராஜா முன்வந்தார். அப்புறம் அவரோட சில படங்களுக்கு வேலை செய்தேன். நடிகர் பிரபுவோட அறிமுகம் கிடைச்சது. அவர் என்மேல் நம்பிக்கை வைத்து பாஞ்சாலங்குறிச்சி படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தார்.திரைப்படத்துறையில் இருக்கும் பெரியாரியவாதிகளில் நீங்களும் ஒருவர். நீங்கள் எப்படி பெரியார் பாதைக்கு வந்தீங்க?பெரியார் பாதையில திட்டமிட்டு நான் வரவில்லை. நான் ஒரு ஒத்தையடிப்பாதையில நடந்துக்கிட்டு இருந்தேன். அந்த ஒத்தையடிப் பாதை வந்து சேர்ந்த இடம் பெரியாரோட பாதையா இருந்துச்சி.சின்னப்பையனா இருக்கும்போதே நான் ரொம்ப முற்போக்கான ஆளாத்தான் இருந்தேன். விளையாட்டு, பாட்டு, பேச்சு, கராத்தே, சிலம்பம்னு தனித்துவமான் ஆளாத்தான் இருப்பேன். எங்க ஊரிலேயே அப்ப கராத்தே கத்துக்கிட்ட ஆளு நான் ஒருத்தன் தான். அதனால் முரடன் மாதிரி தெரிவேன். ஆனா அப்பவும் நேசமான ஒரு மனுசனாத்தான் இருந்தேன். மரக்கன்றுகள் நடுவேன். பொதுக்கிணறை தனியாளா நின்னு தூர்வாருவேன்.பேய், பிசாசு பயம் கிராமங்கள்ல அதிகமா இருக்கும். ஆனா நான் பெரும்பாலான நேரங்கள் சுடுகாட்டில தான் இருப்பேன். வெட்டியானோட பேசிக்கிட்டு இருப்பேன். நிறைய படிப்பேன்.எங்க பகுதி வறுமையானது என்பதால், கொலை, கொள்ளை அதிகமாக இருக்கும். எங்க ஊர்ல குலதெய்வக் கோவில் ஒண்ணு இருக்குது. அதுக்கு தினமும் வீட்டுக்கு ஒரு ஆளா கத்தி, கம்போட காவலுக்கு போவோம். காரணம் பக்கத்து ஊர்லே இருந்து யாராவது வந்து கோயிலைக் கொள்ளை அடிச்சிருவாங்க என்ற பயம். அப்ப எனக்குள்ளே கேள்வி. எல்லாரையும் காப்பாத்தற சாமிக்கே நாம காவல் இருக்க வேண்டியிருக்கு. திருடங்க கிட்டயிருந்து தன்னைத்தானே காப்பாத்திக்காத சாமி நம்மளை எப்படிக் காப்பாத்தும். இதை பெரியவங்ககிட்ட கேட்டப்போ திட்டு தான் கிடைச்சுது.அப்பவே கோவிலுக்கு போற பழக்கம் எல்லாம் கிடையாதா?எனக்கு இயல்பாவே கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை. கோவில் திருவிழா நேரங்கள்ல ஊர்ல இருக்கிறவங்களுக்கு சாமி வரும். அப்பவும் நான் அவங்கக்கிட்ட கேள்வி கேட்பேன். கோவிலுக்கு வெளிய இருக்கிற நீங்கள்ளாம் சாமி வந்து ஆடுறீங்களே, கோவிலுக்கு உள்ள இருக்கிற அய்யருங்க ஒருபோதும் சாமி வந்து ஆடுனதில்லையேன்னு. அந்தக் கேள்வியே அவங்களுக்குப் புரியாது.நான் கபடி விளையாடும்போது கீழே விழுந்து கை பிசகிறும். மருமகனுக்கு அடிபட்டிருச்சேன்னு என்னோட அத்தை சாமியாடும். எனக்கு யாரோ செய்வினை வைச்சுட்டான்னு சொல்லி மண் எடுத்துப் பூசும். யாரும் செய்வினை வைக்கலை, கீழே விழுந்துட்டேன், கை பிசகிடுச்சின்னு சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க. சாமி வந்து ஆடும். ஆடி முடிச்சிட்டு கொஞ்ச நேரத்திற்கு பிறகு சாமி களைவெட்டி எடுத்துட்டு காட்டுக்கு களை பறிக்கப் போகும். இதைப் பார்க்க எனக்கு வேடிக்கையா இருக்கும்.இந்த மாதிரி விஷயங்களை கூர்ந்து கவனிக்கும்போது ஊர்ல இருக்கிற சாதிப் பிரிவுகளும் தெரிஞ்சுது. எங்க ஊர்ல ஆற்றுப்பாசனமோ, அருவிப்பாசனமோ கிடையாது. வானம் பார்த்த பூமியா இருக்கிறதால கண்மாய்ப்பாசனம் தான். கண்மாய்க்கரைகள்ல தான் கிராமங்களோட வீடுகள் இருக்கும். கண்மாய்ல தேங்கியிருக்கிற தண்ணியை, கரையிலே கல்லு கட்டி, பிரிச்சு வைச்சிருப்பாங்க. ஒவ்வொரு பிரிவுத் தண்ணியிலயும் ஒவ்வொரு சாதிக்காரங்க குளிக்கணும். எங்க குளிச்சாலும் எப்படி பிரிச்சாலும் எல்லாரோட அழுக்கும் வியர்வையும் மொத்தத் தண்ணியிலயும் தான் கலந்திருக்கும். ஆனா இடம் மாறி குளிச்சிட்டா வெட்டுக் குத்து கொலையே நடக்கும். இதெல்லாம் எனக்கு பெரிய பைத்தியக்காரத்தனமா தெரிஞ்சுது.பள்ளியில் படிக்கும்போது நிறையக் குழப்பங்கள் ஏற்பட்டது. பரமசிவன் தலையில் இருந்து கங்கை வருதுன்னு தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுத்தது. கங்கை ஆறு இமயமலையில் உற்பத்தியாகிறதுன்னு புவியியல் பாடம் சொன்னது. ‘கங்கை எங்க உற்பத்தியாகுது பரமசிவன் தலையிலயா, மலையிலயா, ஒரே வகுப்பில இந்தக் குழப்பம் வந்தா என்னால படிக்க முடியாது, எங்க உற்பத்தியாகுதுன்னு முடிவு பண்ணிட்டு பாடம் நடத்துங்க’ன்னு ஆசிரியர்கள்கிட்ட சொல்லியிருக்கேன்.வகுப்புலே நான் எல்லாச் சாதி மாணவர்களுடனும் பழகியிருக்கேன், சினிமாவுக்கு போயிருக்கேன், விளையாடியிருக்கேன். ஆனா ஊருக்குள்ள போகும்போது அவன் வீட்டுக்கு இவன் போகக்கூடாது, இவன் தெருவில அவன் நடக்கக்கூடாதுன்னு இருந்தப் பிரிவுகளை என்னால் தாங்கிக்க முடியலை. இதுமாதிரி எனக்குள்ள ஏற்படற கோபங்கள் தேடலா மாறிச்சு.அப்புறம் பள்ளிக்கூடம் முடிச்சு கல்லூரியில் பொருளாதாரம் சேர்ந்தேன். அங்க எனக்கு காரல் மார்க்ஸ் அறிமுகமானார். தொடர்ந்து நூலகத்தில் நிறைய படிக்க ஆரம்பிச்சேன். அங்க தான் பெரியார் பத்தி தெரிஞ்சுது. அந்தக் கிழவரைப் படிக்கும்போது, அவர் நமக்காக ஒரு பெரிய தார்ச்சாலையே போட்டு வைச்சிருந்தது. தெரிய வந்தது. அதுவரை ஒரு ஒத்தையடிப்பாதையில நடந்து வந்த நான் அந்த தார்ச்சாலையில் சேர்ந்துக்கிட்டேன்.அப்புறமா நிறைய படிக்க ஆரம்பிச்சேன். படிக்கப் படிக்க உலகத்தை விரிவா ஆழமா புரிஞ்சிக்க முடிஞ்சது. அப்பதான் நம் சமூகத்தில என்னென்ன பிழைகள் இருக்குது, என்னென்ன தவறுகள் இருக்குதுன்னு புரிஞ்சுது.சுத்துற பூமியில எது கிழக்கு, மேற்கு? எனக்கு பகல்னா இன்னொரு நாட்டில நள்ளிரவு. இதுல எது நல்ல நேரம் எது கெட்டநேரம்? ஒருத்தன் கெட்டநேரம்னு நினைக்கிற நேரத்தில இன்னொருத்தன் நல்ல காரியம் தொடங்குறான். இந்தப் பைத்தியக்காரத்தனமெல்லாம் தெரிய வருது. நாம் அறிவியலின் பிள்ளைகள்கிறதை இந்தச் சமூகம் மறுக்குதுன்னு புரிஞ்சிக்கிட்டேன். இதைப் புரிய வைக்கிற வேலையை நாம செய்யணும்னு தோணிச்சு. அதன்படி நடந்துட்டு வர்றேன்.அறிவியல்படி நடக்கணும்னு சொல்றீங்க. ஆனால், நீங்க இருக்கிற திரைப்பட உலகம் பூஜை, ராசி, செண்டிமென்ட்னு நிறைய மூடப்பழக்கங்களோடு இருக்கிற இடம். இதை நீங்க எப்படி சமாளிக்கிறீங்க?என்னோட கொள்கைகள் காரணமா என்னை நிராகரிக்கிற சூழலும் இருக்கத்தான் செய்யுது. ஆனால் நான் தெளிவா இருக்கேன். அதனால எதுவும் என்னை பாதிக்கிறதில்லை. எங்கிட்ட நிறைய பேர் சொல்லியிருக்காங்க. ‘நானும் சின்ன வயசிலே நாத்திகம் பேசியிருக்கேன். உனக்கு இப்ப இள ரத்தம். ரத்தம் சுண்டிப்போனா எல்லாம் சரியாயிரும்’னு. நான் உடனே கேட்பேன், ‘அப்ப உங்களுக்கு சுண்டிப்போச்சா?’நான் சின்ன வயசில் நீச்சல் கத்துக்கிட்டேன், இப்ப மறந்துப்போச்சுன்னு எப்படிச் சொல்ல முடியும்? ஒரு விஷயம் கத்துக்கிட்டா சாகுறவரைக்கும் மறக்காது. அதுமாதிரித்தான் அறிவுத் தெளிவும். நான் தெளிவாத்தான் இருக்கேன்.தேங்காய் உடைக்கிறது மாதிரி விஷயங்களை நான் முதல் படத்தில இருந்தே தவிர்த்தேன். பூஜை பண்றதை நீங்க பண்ணிக்கலாம், நான் தடுக்கலே, ஆனா என்னைக் கூப்பிடாதீங்கன்னு சொன்னேன். சாமி கும்பிடறது, சாமிப் படத்தைக் காட்டறது போன்ற காட்சிகள் என் படத்தில் இருக்காது. என் படம் வெற்றியடைஞ்சுதுன்னா நான் சொல்றதை எல்லாரும் கேட்க ஆரம்பிப்பாங்க. வெற்றி பெறுகிற வரைக்கும் சிக்கல் தான். இப்ப நான் எல்லாராலயும் அறியப்படற ஒரு ஆளா இருக்கிறதால அவரு அப்படித்தான்னு விட்டுருவாங்க.தொடர்ந்து படம் வெற்றியடைஞ்சா இதுமாதிரி விஷயங்கள் சாதாரணமாயிடும். ஒரு படம் தோல்வியடைஞ்சா மறுபடியும் பிரச்சனைகள் தொடங்கும். மறுபடியும் போராடி எழுகிறவரைக்கும் அவங்க சொல்றதையெல்லாம் தாங்கித்தான் ஆகணும்.எனக்கு முன்னாடியே இங்க இயக்குனர் ஷங்கர், மணிரத்னம், கமல்ஹாசன் எல்லாருமே கடவுள் நம்பிக்கை இல்லாத, மூடப்பழக்கங்களை நம்பாத முற்போக்குவாதிகள் தான். ஆனா அவங்க யாருமே என்னளவுக்கு தரையில் இறங்கி போராட வரவில்லை. ஷங்கரும், மணிரத்னமும் இதுபத்தி பேச ஆரம்பிச்சா, ஒருத்தன் இறைநம்பிக்கை இல்லாம மனித உழைப்பை நம்பி இவ்வளவு உயரத்தைத் தொட முடியுமாங்கிறதுக்கு முன்னுதாரணமா இருப்பாங்க. ஒரு மனிதன் வாழ்வதற்கு சாதியோ, மதமோ, கடவுளோ அவசியமில்லை. காற்று, நீர், மொழி மட்டும் தான் அவசியங்கிறது தெரியவரும்.திரைப்படம் என்பது காட்சி ஊடகம். ஆனால் தமிழ் சினிமா வசனங்களால் நிரம்பியிருக்கிறது. இதற்கு என்ன காரணம்?உலகத் திரைப்படங்களோடு நம் படங்களை ஒப்பிடவே கூடாது. நம் வாழ்க்கை முறையே இங்கு வேறு. ஒரு மரணக் காட்சியை கதறி அழாம காட்சிப்படுத்தவே முடியாது. என்னோட பாட்டி எண்பது வயசில இறந்து போனாங்க. என் உறவுக்காரங்க கிராமத்தில பேருந்து நிறுத்தத்தில் இருந்து உருண்டு புரண்டு அழுதுட்டு வந்ததை நான் பார்த்திருக்கிறேன். என்னை என்னோட பாட்டிதான் வளர்த்தார்கள். அவங்க இறந்தபோது அவங்களைப் பத்தின முழு நினைவும் எனக்குள்ள ஓடுது. என்னால எப்படி கதறி அழாம இருக்க முடியும்?என்னோட தாத்தா இறந்து போகும் போது அவருக்கு 95 வயசு. அவரை சுடுகாட்டுக்கு கொண்டு போற வரைக்கும் எங்கப்பா அழலை. சுடுகாட்டில புதைக்கும்போது அவர் கதறியழுததைப் பார்த்து மயானமே அரண்டது. இதுமாதிரி சூழல் தான் நம்மளோடது. என்னோட சின்னம்மா சின்ன வயசிலேயே விதவையாயிட்டாங்க. அதுக்கு என்னோட அம்மாச்சி அழுகுறா ‘நான் பெத்த மகளுக்கு மிஞ்சி கழட்டி வைக்க மிகுந்த வயசாச்சோ, தாலி கழட்டி வைக்க தளர்ந்த வயசாச்சோ’. இந்த ஒப்பு இல்லைன்னா அந்த சோகம் தைக்காது. என் அப்பா அழுதது நிஜம். அந்த நிஜத்தை நான் எப்படி மௌனமா காமிக்க முடியும்?மரணத்தை மௌனமா எதிர்கொள்றது சினிமாவில் தான் நடக்கும். எதார்த்தத்தில் கதறியழாமல் மரணத்தை கடந்து போகவே முடியாது. வெடிக்காமல் மரணத்தை ஜீரணிக்கவே முடியாது. மரணம் எல்லாருக்கும் நிகழும், அதை தாண்டித்தான் ஆகணும்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா நீங்க எவ்வளவு பெரிய திடமான ஆளாக இருந்தாலும் மரணம் உங்களை அசைக்கும். அதுதான் எதார்த்தம். அதை ஆங்கிலப் படத்தில் வருவது போல் மௌனமாக காண்பிக்க முடியாது.நாம் வாழ்க்கையில் கதை கேட்டு பழகிய ஆட்கள். பகவத்கீதையும், பைபிளும் பத்துக் கட்டளையோட நிற்கவில்லை. அதைப் புரிய வைப்பதற்கு நிறையக் கதைகளை சொல்கிறது. அதுமாதிரி நம்ம வாழ்க்கை முறைக்கு ஒரு விஷயத்தை புரிய வைக்கணும்னா பேசித்தான் ஆகணும். அது நாம் எடுத்துக் கொள்கிற கதைகளைப் பொறுத்தது. சிலக் காட்சிகளை பேசாமல் விட்டு விடலாம். நானே என்னோட படங்களில் 600 அடி வரைக்கும் பேசாமலே விட்டுருக்கேன்.பாலுமகேந்திரா படங்கள்ல உரையாடல்கள் சுருக்கமா இருக்கும். அண்ணாவும், கலைஞரும் எழுதகிற காலத்திலேயே வசனங்களை சுருக்கமாக எழுதியிருக்கிறார்கள். நான் நிறைய ரசிச்சிருக்கேன். அதை அந்தக் காட்சியும், கதையின் தன்மையும் தான் தீர்மானிக்க முடியும். காட்சி ஊடகத்திலயும் நாம என்ன சொல்ல வருகிறோம் என்பதை பார்வையாளனுக்கு உணர்த்த உரையாடல்கள் அவசியப்படுகிற்து. நீயாப் புரிஞ்சிக்கோன்னு விட்டுட்டா சில காட்சிகள் போயே சேராது.தம்பி மாதிரியான படத்தை முழுக்க காட்சிகளால் நகர்த்த முடியாது. அந்தப் படத்தில் ஒரு காட்சி.. கொலை செய்கிற கொலையாளியை காவல் நிலையத்துக்கு அழைத்துப் போவது தான் இதுவரைக்கும் வந்த சினிமா. அதுதான் ஹீரோயிசம்னு பேசப்படுது. அதைச் செய்யாமல் கொலையாளி யாரைக் கொலை செய்தானோ அவன் வீட்டின் முன்னாடி கொலையாளியை நிறுத்தி யோசிக்க வைப்பான் கதாநாயகன். ஒரு நிமிட கோபத்திற்கு, ஒரு நிமிட அவசரத்திற்குப் பின்னால் எத்தனை பேரின் கண்ணீர் இருக்கிறதுங்கிறதை உணர்த்துற காட்சி. அதை மௌனமா விட்டாலே புரியும். அதைத்தாண்டி கொலையாளிக்கிட்ட, ‘பூவையும் பொட்டையும் இழந்துட்டு பிள்ளைகளை எப்படிக் காப்பாத்தப் போறோம்னு ஒரு பொண்ணு அழறாளே அது உன் காதுல கேட்குதா, பிள்ளையைப் பறி கொடுத்துட்டு ஒரு தாய் அழறாளே அது கேட்குதா, நாளைக்கு நீ ஜெயிலுக்கு போன பிறகு உன் குடும்பத்திற்கு இதுதானே கதி’ன்னு கேட்கிற இடத்தில தான் சொல்ல வந்த விஷயம் மனதிலே அதிகமா தைக்குது.காட்சியும், கதையும் தான் உரையாடல்களைத் தீர்மானிக்கணுமே ஒழிய நாம திட்டமிட்டு எதையும் செய்ய முடியாது. புரட்சியை மௌனமா எப்படி செய்ய முடியும்? தம்பி படத்தில் ஒரு இடத்தில், ‘வெளிநாட்டில் இருந்து பறந்து வரும் பறவைகளுக்காக தீபாவளி கொண்டாடாம இருக்கிற என்னோட தேசத்தில் எவன்டா குண்டு வைக்கிறது’ன்னு ஒரு கேள்வி வரும். அதைப் பேசாம எப்படி புரிய வைக்க முடியும்? ‘வன்முறைன்னா நான் வன்முறையா? அடிக்க ஓங்குகிற கைக்கும் தடுக்க நீட்டுகிற கைக்கும் வித்தியாசம் இல்லையா? இதயம் பழுதுபட்டா அறுவைசிகிச்சை செய்வது வன்முறையா?’ இதயத்தை இரண்டா பிளக்குறது மருத்துவங்கிறதை நான் எப்படி சொல்றது? இதை மௌனம் சொல்லாது. உரையாடல்கள் மூலம் தான் நான் உரக்கச் சொல்ல முடியும்.பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்தவர்கள் நாம். அதனால் இங்குக் காட்சியை புரிந்து கொண்டு உள்வாங்குகிறவர்கள் மிகக் குறைவு. திருக்குறளோட அர்த்தம் உங்களுக்குத் தெரியும். ஆனால் திருக்குறளை படிச்சுக் காண்பிச்சு, அதுக்கு அர்த்தமும் சொல்ற நிலையில் தான் இங்க வெகுவான மக்கள் இருக்கிறாங்க. இதுக்கெல்லாம் போய் என்ன விளக்கம் சொல்றது, தானாப் புரிஞ்சுக்க வேண்டியது தானேன்னு நீங்கக் கேட்க முடியாது. விளக்கம் சொல்லித்தான் ஆகணும்.இந்த மாதிரி வாழ்க்கை முறையில் இருந்துட்டு இங்கிலீஸ் படம் மாதிரி எடுக்கப்போறேன்னு சொல்லி, எங்க ஊர் பரமக்குடியில் ஒருத்தனை அப்படியே நடக்க விட்டு படம் எடுத்தா அது வயலும் வாழ்வும் மாதிரித் தான் இருக்கும். இரண்டாவது காட்சியிலயே படத்தைப் போடுடான்னு நம்மாளு கத்துவான்.அடுத்தவன் மரணம், கண்ணீர், கற்பழிப்பு, கொடூரம் எல்லாத்தையும் நாம ரசிக்கக் கத்துக் கொடுத்திருக்கோம். ஒருத்தனைக் கொலை செய்தா கைத்தட்டுறாங்க. ஏன்னா கொலை செய்யப்பட்டவன் கெட்டவன்னு நாம சொல்றோம். கெட்டவன் மரணமும் சிலரை பாதிக்குதுன்னு நாம சொல்லித் தரலை. ஆட்டோ சங்கர் சமூக குற்றவாளின்னு தூக்கில் போட்டாங்க. அவன் பிணத்தை கட்டிப் பிடித்து அழவும் நாலு பேர் இருந்ததை மறந்து விட்டோம். வீரப்பன் மரணத்திற்கு நான் அழுதேன். அவனுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் அழுதுது. அப்பக் கெட்டவன்னு எதை வைச்சித் தீர்மானிப்பீங்க? இதையெல்லாம் வசனம் இல்லாம எப்படி சொல்ல முடியும்?தமிழ்த் திரைப்படங்கள் ஏன் ஒரே மாதிரி கதைக்களங்களையே தேர்வு செய்கிறது. கதாநாயகன், கதாநாயகி, வில்லன், காதல், சண்டை, பாடல் இதுதான் ஒரு திரைப்படம். வித்தியாசமான கதைக்கருக்களுடன் ஏன் படங்கள் வருவதில்லை?இங்கு சினிமா ஒரு பெரிய வணிக முதலீடு. இதில் வேறு மாதிரியான கதைக்களத்தை தேர்வு செய்யவே முடியாது. நம் மக்கள் காலங்காலமாக கதாநாயகனை வழிபடுகிறார்கள். நம்மளோட புராணக் கதைகள், வரலாறு எல்லாவற்றிலும் நமக்கு ஒரு கதாநாயகன் வேண்டும். அலெக்ஸாண்டரை மாவீரன்னு சொல்றோம். ஆனால் என்னோட பார்வை வேறு. ஒலிம்பிக்கில் ஓடி தங்கம் வாங்குகிறவன் தான் மாவீரன். யானைப்படை, குதிரைப்படையோட வந்து அப்பாவி மக்களை கொன்றுக் குவிக்கிறவன் பேரு மாவீரனா?ஒரு புராணக் கதையில் கதாநாயகனா வந்த ராமனை கடவுளா கும்பிடுற ஆளுங்க நாம. மகாபாரதத்தில் வரும் அத்தனை பேரும் நமக்கு ஹீரோஸ். அன்னிக்கு ஆரம்பிச்ச இந்தப் பழக்கம் இன்னிக்கு சினிமாவிலயும் தொடருது. கதாநாயகர்களை வழிபட்டுக் கொண்டிருக்கிறான். அதனால தான் கட் அவுட்டுக்கு பால் ஊத்தறான், கற்பூரம் ஏத்தறான், மன்றம் வைக்கிறான். இவன் ஒரு உச்ச வணிகத்தில் இருக்கிறான். இந்த நிலையில் ‘Children of the heaven’ மாதிரி படம் எடுத்தா பார்க்க வரமாட்டான்.தம்பி படத்திலேயே எந்த நடிகரும் நடிக்க முன் வரலை. மாதவன் தான் ஒத்துக்கிட்டார். பிதாமகன் படத்தையே பாலாவைத் தவிர வேறு யாராவது இயக்கியிருந்தா விக்ரம் நடிச்சிருப்பாரா? ஒரு தளத்திற்கு போன பிறகு, தன்னை நிலைநிறுத்திய பிறகு வேறு மாதிரியான படங்கள் பத்தி யோசிக்கலாம். பாலுமகேந்திராவோட மூன்றாம் பிறை தெரிந்த அளவுக்கு வீடு, சந்தியாராகம் எத்தனை பேருக்கு தெரியும்? வணிக நோக்கில்லாமல் மிகத் தரமாக தயாரிக்கப்பட்ட படங்கள் அவை. இங்கு இருக்கிற வணிக அழுத்தத்தில் நல்ல படங்கள் எடுப்பது மிகவும் சிரமமான வேலை.ஏன் நல்ல படம் வரலைன்னு கேள்வி கேக்குற கேள்வியாளனே படைப்பாளியா மாறும்போதுதான் நல்ல திரைப்படங்கள் இங்கு சாத்தியம். குட்டின்னு ஒரு படம் வந்தது. நல்ல படம் எடுக்கணுங்கிற நோக்கில் தன்னோட திருப்திக்காக ரசிகர்களைப் பத்திக் கவலைப்படாம சொந்த முதலீட்டுல எடுத்த படம். எத்தனை பேர் அதைப் பார்த்தாங்க?நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் இப்படி எல்லாராலயும் இயக்கப்படற ஆள்தான் இங்கு இயக்குனர். எனக்கெல்லாம் கோடிக்கணக்கில கனவிருக்கு. படைக்கத் தளம் எங்க இருக்கு?இங்கு எல்லாத் திரைப்படங்களும் கதாநாயகனை சுற்றியே இருக்கிறது. அதற்கும் மேலேபோய் கதாநாயகனுக்காகவே கதை எழுதி படம் பண்ணுகிற சூழ்நிலையும் இருக்கிறது. இது ஆரோக்கியமற்ற சூழ்நிலை மாறுமா?இதை மாற்றித்தான் ஆக வேண்டும். அதற்கு முதலில் மக்களோட ரசனை மேம்படணும். தற்போதைய சூழ்நிலையில் இலக்கிய வட்டம் விரிந்திருக்கிறது. மாணவர்கள் visual communication படிக்கிறாங்க. அவனுக்கு உலகப்படம் அறிமுகப்படுத்தப்படுது. அதுமாதிரி படத்தை ஏன் நாம இயக்கக்கூடாதுன்னு அவனுக்குத் தோணுது. அப்ப நல்ல படங்கள் வெளிவரும்.பாசிலும், கே.விஸ்வநாத்தும் ஆரம்பத்தில் ஒலிப் பொறியாளர்கள் தான். இங்க இருக்கிற படங்களை பார்த்து நொந்து போய் இயக்குனராயிட்டாங்க. கே.விஸ்வநாத் ஆரம்பத்தில் வணிகப்படங்களாத் தான் எடுத்தார். அதற்குப் பிறகு தான் சங்கராபரணம் எடுத்தார். அந்தப் படம் ஓடினதால அவரும் நல்ல படங்கள் எடுக்க ஆரம்பிச்சார். ராமநாராயணன் ஆரம்பத்தில பட்டம் பறக்கட்டும், சிவப்பு மல்லின்னு அற்புதமான படங்கள் எடுத்த இயக்குனர். அந்தப் படங்கள் ஓடாததால அவரு நாய், குரங்குகளை வைச்சு ஆடிவெள்ளி, அமாவாசைன்னு பண்ண ஆரம்பிச்சார். எல்லாம் பிச்சுக்கிட்டு ஓடிச்சி. நம்ம மக்களோட ரசனை படைப்பாளியையே புரட்டி போட்டுடிச்சி.தற்போது இந்த ரசனை மாறிக்கொண்டு வருகிறது. ஒரு வீடியோ கேமரா இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் நல்லக் கதைகளை குறும்படமா பண்ணலாங்கிற நிலைமை வந்திருக்கிறது. நல்ல ரசனையோடு படைப்பாளிகளும், பார்வையாளர்களும் உருவாகும்போது இங்கும் வேறு மாதிரியான கதைத்தளங்களும், படங்களும் உருவாகி வணிகப்படங்களை தோற்கடிக்கும். ஆனால் இப்போது இருக்கிற சூழ்நிலையில் நான் நல்லத் தரத்தோடு வேறு ஒரு கதையை யோசித்தால் அது பைத்தியக்காரத்தனம். நான் போராடிக்கொண்டே இருப்பேன். பின்னால் வருபவர்கள் என்னைத் தாண்டி வெற்றி பெற்று எங்கேயோ போய்விடுவார்கள்.கண் சிவந்தால் மண் சிவக்கும் படம் எடுத்தவனோ, அவள் அப்படித்தான் எடுத்தவனோ இங்கே இல்லை. இங்க இருக்கிற வியாபாரத்தில நீங்க வெல்லலைன்னா சமூகம் உங்களுக்கு எந்த மன்னிப்பும் தராது. தரமான படைப்புகளோடு வணிக வெற்றியையும் வைச்சிக்கிறது இங்க கட்டாயமாயிடுது. அந்தப் போராட்டத்தில தான் பாலா, சேரன், தங்கர், நான் எல்லாரும் மல்லுக்கட்டறோம்.பத்துப் பெரிய படங்களுக்கு மத்தியில ஒரு நல்ல தரமான படத்தைக் கொண்டு வந்தா இங்கு திரையரங்கே கிடைக்காது. மதங்கொண்ட யானைகளுக்கு மத்தியில் மாட்டுன குழந்தை மாதிரி சின்னாபின்னமாகிடுவோம். தரமான படங்களுக்கு இங்க என்ன மரியாதை இருக்குது? அழகி படமெல்லாம், குடுக்கிற காசைக் குடுத்துட்டு எடுத்துட்டுப் போங்கன்னு கூவிக்கூவி வித்தப்படம் தானே. சேது படப்பெட்டியை நானும் பாலாவும் தோளில் வைச்சி விக்காத குறைதான். எப்பவுமே இங்க தரமான படைப்புகளுக்கு பெரிய முட்டுக்கட்டையும், போராட்டமும் இருந்துட்டுத் தான் இருக்கு.அதேநேரத்தில் ஆபாசம், வன்முறையைக் குறைச்சு சமூக அக்கறையோட நல்ல படங்கள் எடுக்கணும்னு வருகிற படைப்பாளிகளோட எண்ணிக்கை இப்ப அதிகரிச்சிருக்கு. அந்த மாதிரியான படைப்பாளிகளை இங்க இருக்கிற ஹீரோக்கள் ஆதரிக்கறதில்லை. அவங்க மனசுக்குள்ள ஒரு கதை வைச்சிருக்காங்க. அதைத்தான் அவங்களை அணுகுற இயக்குனர்கள் சொல்லணும்னு எதிர்பார்க்கிறாங்க. அப்புறம் படம் எப்படி வெளங்கும்?படம் எடுக்க வருகிற எல்லாருமே தான் ஒரு உயர்ந்த இடத்துக்கு போகணும்னு ஆசையோடத்தான் வருவாங்க. அந்த இடத்தில வணிக ரீதியாக படம் எடுக்கிறவன் மட்டும்தான் நிக்க முடியுது. அவனுக்கு மூணுகோடி ரூபாய் சம்பளம், தரமான இயக்குனர்களுக்கு பத்து லட்ச ரூபாய் சம்பளம்னா நல்ல படம் எடுக்கிறவன் பதறிட மாட்டானா? அவருக்கு விக்கிற அதே விலையில் தான் எனக்கும் பால் விக்கிறாங்க. நல்லப் படம் எடுத்திருக்கார்னு எனக்கு இரண்டு ரூபாய்க்கா தர்றாங்க? வாழ்க்கைப் போராட்டத்தில் தடம் புரண்டு பொருளீட்டல் முக்கியமாயிடுது. நான் சொல்றது அந்தப் போராட்டத்திலயும் கொஞ்சமாவது தரத்தையும் நேர்மையையும் காப்பாத்தணும்னுதான்.நல்ல படம் எடுக்கணும்னு வர்றவங்களுக்கு வாய்ப்பு இல்லாத நிலை ஒரு பக்கம் இருக்க, வியாபாரப் படங்கள் எடுக்கணும்னு வர்ற நிறைய பேர் உதவி இயக்குனர்களாவே திரும்பிப் போயிடுறாங்க. பாதி பேர் கூட இயக்குனர்களாகிறதில்லை. இதுக்கு என்ன காரணம்?நிறைய பேருக்கு ஆர்வம் மட்டும் தான் இருக்கு. சினிமாவை உள்வாங்கிக்கிற தன்மை இல்லை. படத்தைப் பார்த்துட்டு விமர்சிக்கிறது வேற, படைப்பாளியா மாறுறது வேற. ஒரு படத்தைப் பார்த்துட்டு இது சரியில்லைன்னு சொல்றவனாலே சினிமா எடுக்க முடியாது. இந்தக் காட்சி சரியில்லை, இதை இப்படி பண்ணியிருக்கலாம்னு சொல்றவன் தான் படைப்பாளி. அவன்தான் ஜெயிப்பான். எதுவும் சரியில்லைன்னு சொல்லிட்டு சலிச்சுப்போய் படுக்கிற கூட்டம் தான் இங்க அதிகமா இருக்கு. எது சரின்னு சிந்திச்சவன் தான் படைப்பாளியாய் மாறி வெற்றி பெற்றிருக்கான்.இங்கு தயாரிப்பாளர்கள் குறைவு, நடிகர்கள் பத்து பேர் தான். ஒரு உதவி இயக்குனர் தயாரிப்பாளரை அணுகினாலே, குறிப்பிட்ட நடிகரோட தேதி வாங்கிட்டு வாப்பா பண்ணலாம்னு தான் சொல்றாங்க. என்னை நம்பி மாதவன் படம் நடிக்கலைன்னா இன்னும் கூட இரண்டு வருஷம் நான் சும்மாத் தானே இருந்திருக்கணும். இதுதான் எதார்த்தமான சூழல். பாலாவைப் பாருங்க. சேதுன்னு விக்னேஷை வைச்சு படம் பண்ணி சரியா வராம, விக்ரம்னு அறியப்படாம இருந்த ஒருத்தரை கூட்டிட்டு வந்து அவருக்குள்ள முழுத் திரைக்கதையையும் செலுத்தி அவரை சிற்பி மாதிரி செதுக்கி எவ்வளவு கஷ்டம். படத்தோட பிரத்யேகக் காட்சியை பார்க்கிறவங்க நல்லா இருக்குன்னு சொல்றாங்க. ஆனா வாங்கி விநியோகிக்க யாரும் முன்வரலை. அதையெல்லாம் வென்று இன்னிக்கு பாலா நிக்கிறார்னா ஏகப்பட்ட காயங்கள் இருக்குது. அப்படி எல்லாராலயும் வெடிச்சு வந்திர முடியறதில்லை. இதைத்தவிர வறுமை, குடும்ப சூழல் காரணமாவும், சரியா வாய்ப்பு கிடைக்காமலும் நாலு வருஷம் திரைப்படத்துறையில் இருந்துட்டு திரும்பிப் போயிடறதும் நடக்குது.கறுப்புப்பணம், பாலியல் ஒழுங்கினங்கள், சீரற்ற சம்பளம்னு தவறுகள் அதிகம் இருக்கிற இடம். ஒரு கொள்கைவாதியா நீங்க இதை எப்படி பார்க்கறீங்க?களையப்பட வேண்டிய விஷயங்கள் சினிமாவில் நிறையவே இருக்குது. சினிமாக்காரன்னாலே இப்படித்தான்னு வெளியே ஒரு கணிப்பு இருக்குது. மிக நேர்மையா ஒழுக்கமா இருக்கணும்னு நினைக்கிற என்னை மாதிரி ஆளும் இதனால பாதிக்கப்படறாங்க. எனக்கு ஒரு வீடு வாடகைக்குத் தர ஆளில்லை. கல்யாணத்துக்குப் பொண்ணு குடுக்குறதுக்கு யோசிக்கறான். சிலர் பண்ணுகிற தப்புகளை பத்திரிகைகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதுவதாலே மொத்த ஊடகமும் கொச்சையானதுங்கிற எண்ணம் வந்துடுச்சி.தமிழ் சினிமாவில் பெண்ணடிமைத்தனம் அதிகமா இருப்பது உண்மைதான். பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாக, பாடலுக்கு மட்டும் பயன்படுத்தறாங்க. அவங்களுக்கு ஒரு கதாபாத்திரம் வைக்கிறதே இல்லை. கதாநாயகனும், கதாநாயகியும் தெருவில் நின்னு, தெருவில் சந்திச்சு, தெருவிலேயே காதலிப்பாங்க. கதாநாயகிக்கு வீடு, குடும்பம் ஒண்ணும் இருக்காது. திரைப்பட விளம்பரங்களில் நடிகை படத்தைப் போடாம நடிகர் படத்தை மட்டும் வைக்கிறாங்க. இந்த பெண்ணடிமைத் தனத்தை முதலில் ஒழிக்கணும்.சினிமா ஒரு சாக்கடைன்னு சொல்லி பெரிய ஆட்கள் எல்லாம் படைப்பாளிகளா மாறாம இதை நிராகரிச்சதால சாக்கடையில் நெளியிற புழுக்களும், பன்றிகளும் ஆட்சியாளர்களா மாறிட்டாங்க. ஈரான், பிரான்ஸ் போன்ற உலக நாடுகள் அனைத்தும் திரைப்படங்கிற வலிமை மிகுந்த ஊடகத்தை போர்க்கருவியா பயன்படுத்தி சமூக அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுறாங்க. நாம மட்டும் தான் அதை கண்ணு வழியே போதையேத்துற விபச்சார விடுதி, சாராயக்கடை மாதிரிப் பார்க்கறோம். காரணம் கேட்டால், ஒரே வார்த்தையில் அது பொழுதுபோக்குன்னு சொல்லிடறான். இந்தியா மாதிரி நாட்டுக்கு என்ன பொழுதுபோக்கு வேண்டிக்கிடக்கு? பொழுதை ஏன் போக்கணும், பேசாம இருந்தா அதுபாட்டுக்கு போயிடாதா? அந்தப் பொழுதை மிக நல்லப் பொழுதாக எப்படி மாத்துறதுங்கிறதை பத்தித்தான் நாம யோசிக்கணும். யோசிக்காதபோது தான் பிரச்சனை வருது.எழுத்தாளர்கள் சினிவாவுக்கு வர்றதில்லைங்கிற ஒரு புறமிருக்க, நல்ல எழுத்தாளர்களின் படைப்புகளை சினிமா ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை?சரித்திரப் படங்கள் சமூகப் படங்களாக மாறியபோது எழுத்தாளர்களுக்கு திரைப்படத்துறையில் அவசியம் இருந்தது. ஆனால் இன்னிக்கு இருக்கிற தமிழ்ச் சினிமாவுக்கு தகுதியும் திறமையும் தேவையில்லை. இங்க இருக்கிற சினிமா ஒரு சூத்திரம். அதை இயக்குறதுக்கு பெரிய பயிற்சி தேவையில்லை. யார் வேணும்னாலும் செய்யலாம். இங்க இருக்கிற எழுத்தாளர்கள் நல்ல படைப்புகளை கொண்டு வருகிறார்கள். ஆனால் இங்கிருக்கிற கதாநாயகனுக்கு அந்தளவுக்கு நல்ல இலக்கியத் தரமுள்ள கதைகள் தேவைப்படவில்லை.நாஞ்சில் நாடனோட ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதைன்னு படமாப் பண்ணினார். அதில சேரனைத் தவிர யார் நடிக்க முன்வந்தாங்க? யதார்த்த கதைகளுக்கு இருக்கிற மரியாதை அவ்வளவுதான். வணிக ரீதியான படங்களோடு மோதமுடியாமல் நல்ல இலக்கியங்கள் சிதைந்து விடுகிறது. பக்கத்தில இருக்கிற கேரளா, மேற்கு வங்கத்தில் எழுத்தாளர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். மலையாளத்தில் வாசுதேவன் நாயருக்கோ, டி.தாமோதரனுக்கோ இருபது லட்சம் குடுக்கிறதுக்கு ஆட்கள் இருக்காங்க. இங்க மிகப் பெரிய எழுத்தாளர் வசனம் எழுதினாலே ஐம்பது ஆயிரம் குடுக்க யோசிக்கிறாங்க. மார்க்சிஸ்டுகள் மண்ணில் தான் இலக்கியம் கவுரவிக்கப்படுகிறது.பசும்பொன் படத்திற்குப் பிறகு எனக்கெல்லாம் நல்ல ஊதியம் கொடுத்து எழுதச் சொன்னா நான் ஏன் இயக்குறதுக்கு வர்றேன்? பாசமலர் பட காலத்தில் எல்லாம் எழுத்தாளர்கள் படத்தை எழுதிக் கொடுத்தாங்க. இயக்குனர்கள் இயக்கிட்டு இருந்தாங்க. அதனால நிறையப் படங்கள் வெளிவந்தது. இப்ப எழுத்தாளனுக்கு இங்கு மரியாதையே இல்லை. எல்லாருக்கும் பின்னாடி கடைசியா பேர் போடுவாங்க. எழுத்தாளன் என்று கவுரவிக்கப்படுகிறானோ அன்றுதான் இந்த மண்ணில் இருந்து மிகச்சிறந்த படைப்புகள் வெளிவரும்.காக்கிச்சட்டை படத்தோட மிக மோசமான பதிப்பு தான் பாண்டியன் திரைப்படம். அதன் அப்பட்டமான மறுபதிப்பு தான் தெலுங்கில் வந்த போக்கிரி படம். அதோட தெலுங்கு உரிமையை ஒரு கோடி ரூபாய் கொடுத்து விஜய் வாங்கி தமிழில் பண்றார். அஞ்சு லட்சம் ரூபாய் கொடுத்தா பிரமாதமான கதையை எழுத இங்க ஆட்கள் இருக்காங்க. அவங்களை யார் பயன்படுத்தறாங்க? முதல் மரியாதை, மண்வாசனைன்னு அற்புதமான படங்களோட கதை வசனகர்த்தா ஆர்.செல்வராஜை இந்த மண் எங்க வாழ வைச்சுது?உலகமயமாக்கலின் இன்னொரு பக்கமாக, உலக நிறுவனங்கள் பெரிய முதலீட்டோடு தமிழ் சினிமாவில் நுழையப் போவதாக செய்திகள் வருகின்றன. இது எந்தமாதிரியான விளைவுகளை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தும்?இங்க படம் எடுக்கிறதுக்கு தயாரிப்பாளர்கள் வீட்டை அடகு வைச்சு படம் எடுத்து, திரையரங்குக்காக அலைஞ்சிட்டு இருக்காங்க. படம் ஓடலைன்னா தற்கொலை பண்றாங்க. பெரிய நிறுவனங்கள் வந்தால் இந்த நிலைமை மாறும். பெரிய நிறுவனங்கள் பணத்தைக் கையில் கொடுத்து படம் எடுக்கச் சொல்வாங்க. அத அவங்களோட திரையரங்குகளில் அவங்களே வெளியிடுவாங்க. எல்லோருக்கும் காசு கிடைக்கு. அதே நேரத்தில் விநிநோகஸ்தர்கள், இடைத்தரகர்கள்னு திரைப்படத்தை நம்பியிருக்கிற பல குடும்பங்கள் பாதிக்கப்படும்.அது ஒரு புறமிருக்க, இந்த மண்ணோட மைந்தனா இதை நான் எதிர்கிறேன். ஏற்கனவே இங்கு இந்த மண்சார்ந்த படைப்புகள் கிடையாது. இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் வேறு வந்தால் அவங்களுக்கான படைப்புகள் எடுக்க நாம நிர்ப்பந்திக்கப்படுவோம். விதையைக் கொடுத்து விளைய வைச்சி எடுத்துட்டுப் போறமாதிரி தான் இது. வியாபாரத்திற்காக அவன் இந்த ஊடகத்தை பயன்படுத்துவான். நான் இங்க அடிமை ஆயிடுவோம். விவசாயக் கூலி மாதிரி திரைப்படக் கூலி.சிறப்பு பொருளாதார மண்டலம், ரிலையன்ஸ் இதையெல்லாம் உள்ள விட்டதுல என்ன ஆச்சு? என் நிலத்தை என்கிட்டயிருந்து வாங்கி அதில என்னையே விவசாயக் கூலி ஆக்கிட்டாங்க. இந்தியா மாதிரி நாட்டோட பெரிய சாபக்கேடே தன் நிலத்தில் விளைஞ்ச பொருளுக்கு விவசாயி விலையைத் தீர்மானிக்க முடியாததுதான். இப்ப அதனோட விலையை அம்பானி தீர்மானிப்பான். இந்தியா முழுக்க ஒரே விலையை அவன் தீர்மானிக்க முடியும். என் தோட்டத்து தக்காளியை கிலோ நூறு ரூபாய்னு எனக்கே விப்பான். அதாவது மறுபடியும் பண்ணை அடிமை முறை. அன்னிக்கு ஜமீன்தார்கள் சாரட்டிலயும் குதிரையிலயும் வந்தாங்க. இவன் விலையுயர்ந்த கார்களில் லாப்டாப்போட வந்து அதே மாதிரி மறுபடியும் அடிமையாக்குறான். அவன் குறுநில மன்னன் ஆயிடுவான். இதே தான் திரைப்படத் துறையிலும் நடக்கும். உலகமயமாக்கலோட முக்கியப் பிரச்சனையே உங்க நாடு உங்களுக்கு இல்லைங்கிறது தான்.முன்னாடி விளையாட்டாக் கேட்போம். இது உங்க அப்பன் வீட்டு ரோடான்னு. இனி அம்பானி பிள்ளைங்க ஆமா இது எங்க அப்பன் வீட்டு ரோடுதான்னு பதில் சொல்லுவாங்க. ஏன்னா நூறு கிலோமீட்டருக்கு ஒருத்தன் இந்த மண்ணை வாங்கி வைச்சிருக்கான். நாம நடக்கிறதுக்கு அவனுக்கு காசு தரணும். எரிபொருள், அரிசி பருப்பு காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள், சாலை, விளைநிலம் எல்லாத்தையும் வாங்கிட்டான். வெகு சீக்கிரம் தனி ஒரு மனிதனுக்கு இந்த நாடு சொந்தமாயிடும். உங்களைச் சுத்தி உங்களுக்கு தெரியாமலேயே பின்னி வைச்சிருக்கிற கண்ணியில நீங்க மாட்டிட்டு இருக்கீங்க. ஒருநாள் அது தெரியவந்து நீங்க திமிற நினைக்கும்போது அது உங்களை இறுக்கிடும்.தமிழ் சினிமா சாதியை எப்படி கையாளுது. சாதியை எதிர்த்து வந்த படங்கள் கூட அதைத் தீவிரமா செய்யலை. சாதியை எதிர்த்து ‘வேதம் புதிது’ன்னு பாரதிராஜா ஒரு படம் எடுத்தார். அதிலயும் கடைசியில் பார்ப்பனர்களுக்கு அடிபணிந்து போறமாதிரி தான் எடுத்திருப்பார்...மார்க்சிஸ்டுகள், பெரியாரிஸ்டுகளைத் தவிர வேறு யாருக்கும் சாதியைக் கடந்து மக்களை மீட்கணுங்கிற நோக்கம் கிடையாது. இங்க சாதி, மதம்னு எல்லாம் எதுவும் கிடையாது. அது ஒரு உணர்வு அவ்வளவுதான். கடவுள், கற்பு இதெல்லாம் எப்படிக் கற்பிதமோ சாதியும் அப்படி ஒரு கற்பிதம். ஒரு உருவகம். வேதங்கள் சொல்லுது, தர்மங்கள் சொல்லுதுன்னா அதையே நாமக் கொளுத்தணும். ஆனா சாதியை அடிச்சு நொறுக்கணுங்கிற நோக்கத்தில இங்க யாரும் எதையும் படைக்கலை. அந்த உணர்ச்சிகளையும் வைச்சு காசு சம்பாதிக்கணுங்கிற நோக்கத்தில் தான் திரைப்படங்கள் படைக்கப்படுது.நீங்க சாதியைப் பத்திப் பேசறதால இங்க ஒரு கேள்வி கேட்க விரும்புறோம். முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால் உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து இடம்பெறுகிறது.?கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. தம்பி படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும் கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கைரீதியா வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக்கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட பார்வார்ட் பிளாக் கொடிதான் என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்.தமிழ் சினிமாவில் வில்லன்களா காட்டப்படறவங்க பெரும்பாலும் இஸ்லாமியர்களாவோ, கிறிஸ்தவர்களாவோத் தான் இருக்காங்க. அதேமாதிரி தலித் மக்களை கொச்சைப்படுத்தி வசனங்கள் எழுதறதும் தொடர்ந்து நடைபெறுகிறது. பெரியாரிஸ்டா இதை நீங்க எப்படிப் பார்க்கறீங்க?கொச்சைப்படுத்தப்படுறவங்க எல்லாருமே சிறுபான்மையினரா இருக்கிறதால எதிர்த்து கேள்வி கேட்க மாட்டாங்கங்கிற ஆதிக்கத் திமிர்தான் காரணம். அமெரிக்காவில ரெண்டு கோபுரத்தை இடிக்கப்பட்டப்போ, இதுமாதிரி ஒரு வன்முறையே நடக்கலைன்னு அமெரிக்கா சொல்லிச்சு. ஏன்னா கோபுரம் உயரமா இருந்துதில்லை. அதுக்காக ஈராக், ஆப்கானிஸ்தான்னு இரண்டு நாடுகளையே அமெரிக்கா காலி பண்ணிடுச்சி. யாரும் கேட்கலையே ஏன்னா அத ஒரு பெரியவன் செய்யிறான்.நம்மளை மாதிரி ஆளுங்கதான் அமெரிக்காவை நாயை விடக் கேவமலான இடத்தில் வைச்சிருக்கிறோம். ஆனால் மத்த எல்லாரும் அமெரிக்கா அமெரிக்கான்னு தானே பறக்கறாங்க. என் தேசத்தில இருக்கிற எல்லா இளைஞனுக்கும் அமெரிக்கக் கனவு தானே இருக்குது? அமெரிக்காவில் இருக்கிற யாருக்காவது இந்தத் தேசத்துக் கனவு இருக்கா?ஈராக்கில் இருக்கிற அமெரிக்கப் படைகள் வெளியேறணும்னு தாலிபான்கள் நான்கு பேரை பயணக் கைதியா பிடிச்சு வைச்சா நம்ம ஊடகங்கள் அதை எத்தனை தடவை ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’னு ஒளிபரப்புது. ஈராக் மக்களை அமெரிக்கா படுத்துறக் கொடுமையை ஒரு தடவை காட்டத் தயாரா இருக்குதா நம் ஊடகங்கள்?இதே தான் உலகம் பூரா நடக்குது. உலகம் முழுக்க மக்களோட உளவியல் ஒண்ணாத்தான் இருக்குது. இஸ்லாமியன் குண்டு வைக்கிறான்னு திருப்பித் திருப்பிக் காட்டுறாங்க. சரி இஸ்லாமியன் ஏன் குண்டு வைக்கிறான்? அப்சலுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றணும்னு குதிக்கறாங்களே, நாடாளுமன்றத்தை தாக்க வந்தவனுக்கே தூக்குத் தண்டனைன்னா, பாபர் மசூதியை இடிச்சவனுக்கு என்ன தண்டனை? ஒரு தண்டனையும் இல்லையே. இந்தக் கீழ்த்தரமான போக்கை திட்டமிட்டுச் செய்யிறாங்க. சில படைப்பாளிகள் ஏன் செய்யிறோம், எதுக்கு செய்யிறோம்னு தெரியாமலே செய்யிறாங்க.இந்த மாதிரி சமூகப் பிரச்சனைகள் சார்ந்த அறிவு இயக்குனர்கள்கிட்ட எந்த அளவுக்கு இருக்ககிறது?இங்க இருக்கிற சில படைப்பாளிகள் தான் சமூகப் பிரச்சனைகளில் ஆர்வம் காட்டறாங்க. நிறையப் பேர் சினிமாவை வணிகமாத் தான் பார்க்கிறாங்க. ஆங்கிலக் கலப்பினால் தமிழ் அழியறதைப் பார்த்து தாங்க முடியாம குறைந்தபட்சம் தமிழிலயாவது தலைப்பு வைங்கன்னு தான் கேட்டோம். திரைப்படத் துறையில் அதுக்கு என்னை எவ்வளவு அவமானப்படுத்தினாங்க. இன்னிக்கு தமிழில் பெயர் வைச்சா வரிவிலக்குன்னு அறிவிச்சவுடனே விழுந்து விழுந்து பெயரை மாத்துறாங்க. நாளைக்கே இந்தியில் பெயர் வைச்சா மூணு மடங்கு வரிவிலக்குன்னு மத்திய அரசு அறிவிச்சா இந்தியில பெயர் வைப்பாங்களா, மாட்டாங்களா? அப்ப இவங்களுக்கு எங்க தமிழ்ப்பற்று இருக்குது?வரிவிலக்கும் லஞ்சம் தான். வரிவிலக்கு கொடுத்தாவது தமிழ்ப்பெயர் வைக்கட்டுமேங்கிற ஆர்வத்துல தான் முதல்வர் அதைச் செய்தார். பெயரை தமிழில் வைச்சிட்டு கீழே ஆங்கிலத்துல எதுக்கு அதுக்கு ஒரு விளக்கம். இங்க இருக்கிற யாருக்கும் தமிழில் சொன்னால் புரியாதுன்னு நினைக்கிறானா? படத் தலைப்புக்கு மேலே production, presents, creations இதெல்லாம் எதுக்கு? வழங்கும், தயாரிப்புக் கூடம்னு போட்டா என்ன? உண்மையிலேயே மொழிப்பற்று இருந்தா இதையெல்லாம் செய்வாங்களா? சொந்த மொழி புரியாத கூட்டத்தை மீட்டெடுக்கணும்னு பேசற எங்களை கிண்டலடிக்கிற கூட்டத்தை என்ன பண்றது?தொப்புள், தொடை காமிக்காம ஒரு காட்சியை அமைக்க முடியாதா? சாணக்யா படத்தில ஒரு காட்சி.. நமீதா தொப்புள்ல தேங்கியிருக்கிற தண்ணியை சரத்குமார் வாயில எடுத்து பீய்ச்சியடிப்பார். இவரு ராஜ்யசபா எம்.பி. அரசியலை இவருதான் மாத்தப் போறாராம். விஜயகாந்தும் அப்படித்தானே? இவங்களுக்கு என்ன சமூகப் பொறுப்பு இருக்கு.ஷெர்வானி, பைஜாமா போட்டுட்டு நாம படம் எடுக்கிறோமே, வேட்டி கட்டிட்டு இந்தியில எவனாவது படம் எடுக்கிறானா? இந்தத் தேசம் இவனை அங்கீகரிக்கணுமாம், உன்னை இந்த தேசம் மயிரளவு கூட மதிக்கலையே? ஆறரைக் கோடி மக்களுக்கு என்ன தேசியக் கீதம், வங்காளம் தானே? ஒரு தொன்ம மொழியோட சொந்தக்காரனுக்கு தேசிய மொழி இந்திதானே? தேசிய இனத்தோட மொழி அங்கீகாரமே இல்லாம அலையுதே! தமிழைப் பேச அவமானப்படற அளவுக்கு உன் மூளையைச் சலவை செய்து விட்டுட்டானே.நம்மப் பேரு தமிழர்கள். நம்ம நாக்கில என்ன மொழி இருக்குது ஆங்கிலம். இந்த ஊர்ல எங்கயாவது தெரு இருக்கா? Street இருக்கு. நிழற்சாலை, பிரிவு, கிடையாது. Avenue, Sector தான் இருக்குது. இந்தத் தெருக்களில் எத்தனை வெள்ளைக்காரன் நடந்து போயிட்டு இருக்கான்? பிறகு எல்லாப் பெயர்களும் ஆங்கிலத்துலே? ஏன் பண்றோம்னு தெரியாமலேயே செய்யிறது, ரொம்ப மேம்போக்கா இருக்கிறது, எனக்கென்னங்கிற கீழ்த்தரமான எண்ணம் இவையெல்லாம்தான் இதுக்குக் காரணம்.தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிச்சு நாங்க போராடினப்ப எவ்வளவு எதிர்ப்பு வந்தது. இவங்க யாரு கேட்கிறதுக்குன்னு கேட்டாங்க. நாங்க கேட்காம பிரிட்டிஷ் இளவரசரா வந்துக் கேட்பார், ‘தமிழ்ல பெயர் வைங்க’ன்னு?எவ்வளவு கொச்சையான உரையாடல்களை தமிழ் சினிமா பேசிட்டு இருக்கு. உலக நாடுகள்ல தவமாய் தவமிருந்து படத்தைப் பார்த்தா தமிழ்ப்படம்னு தெரியும். 7ஜி ரெயின்போ காலனி, நியூ படத்தைப் பார்த்தா தமிழ்ப்படம்னு சொல்ல முடியுமா? அதில் ஏதாவது நம்மளோட வாழ்க்கை இருக்கா? உரையாடல்கள் இருக்கா? ஆனா படம் எடுக்கிறது, வெற்றி பெறுவது எல்லாம் தமிழனோட காசுலே! இது என்ன நியாயம்? சேரன் படத்திலயோ, பாலா படத்திலயோ நடிகையோட தொப்புளும், தொடையும் தெரியற மாதிரி காட்சியமைப்பு இருக்குதா? சிம்ரனை இடுப்பைக் காட்டாம நடிக்க வைச்ச ஒரே இயக்குனர் பாலாதான். ஏன்னா அவருக்கு சமூக அக்கறை இருக்குது.‘இல்லை நான் இஷ்டத்துக்குத்தான் இப்படித்தான் எடுப்பேன்’னு திமிரா எடுப்பேன்னு சொல்றவங்களை என்ன செய்ய முடியும், ஆத்திரம் தாங்காம கொலைதான் செய்யலாம்.இதுலே, ‘ஆபாசத்தைத் தான் மக்கள் விரும்பறாங்க’ன்னு சொல்றதைத் தான் என்னாலே தாங்க முடியலை. என் மக்களை குறைத்து மதிப்பிட நீ யார்? எவனை கீழ்த்தட்டுன்னு கை காட்டுறியோ அங்கேயிருந்து தான் நீ வந்தேன்னு ஏன் மறந்து போயிட்ட? தமிழ்த் திரைப்படத்தில சில ஏரியாக்களை ‘சி’ சென்டர்னு சொல்லுவாங்க. அந்த ‘சி’ சென்டர் ஆட்களுக்கு ரசனை கிடையாதுன்னும் சொல்வாங்க. தமிழகத்தின் மிகச் சிறந்த படைப்பாளிகள் அனைவரும் இவங்க ‘ச்சீ’ன்னு சொல்ற ‘சி’ சென்டரில் இருந்து வந்தவங்கதான். நீ ரசனைக் குறைவுன்னு சொல்ற இடத்தில் இருந்து தானே பெரிய ரசனை மேம்பாட்டோடு படம் எடுத்தவனும் வந்திருக்கான். அவனை எப்படி நீ குறைச்சு மதிப்பிட முடியும்?இயக்குனர் என்பதைத் தாண்டி நீங்கள் ஒரு மிகச் சிறந்த மேடைப்பேச்சாளர். உங்களோட பேச்சு எல்லோராலும் விரும்பிக் கேட்கப்படுறதுக்கு என்ன காரணம்?நான் அடிப்படையில் மிகவும் வெளிப்படையானவன். ஒருவனது பேச்சு என்பது எண்ணத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது. பாதிக்கு மேல எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்கள் இருக்கிற இடத்தில் எழுத்தின் மூலம் மாற்றத்தை கொண்டு வந்து விட முடியாது. அதனால தான் நான் பேச்சை நம்பினேன். அதுக்காக என்னை பெருசா தயார்படுத்திக்கலை. மனசுக்குள்ள நிறைய விஷயங்களும், கோபங்களும் இருந்தது. திடீர்னு ஒரு மேடையில பேசச் சொன்னப்போ கொட்டித் தீர்த்தேன். அதுக்கு ரொம்ப வரவேற்பு இருந்தது. காரணம் நான் உண்மையாக மக்களின் மீது அக்கறையோடு பேசினேன். அவங்க மேல உள்ள பிரியத்துலே, இப்படி இருக்கீங்களேன்னு கோபத்துல ரொம்ப மோசமா அவங்களைத் திட்டினேன். அவங்க வீட்டுப் பையன் பேசற மாதிரி என்னை அனுமதிச்சாங்க. என்னை ஆதரிச்சாங்க.மேடையிலே ஏறும்போது கோர்வையாப் பேசணும், எதுகை மோனையோடு பேசணும்னு போகக்கூடாது. மக்களுக்கு முன்னாடி நிர்வாணமா நிக்கணும். நான் நின்னேன். நான் படிக்கிற, சிந்திக்கிற, சந்திக்கிறவர்களிடம் உள்வாங்குகிற விஷயங்களை பிரியத்தோடு என் மக்களுக்கு சொன்னேன். அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவ்வளவுதான்.என்னைப் பேசக் கூப்பிடுகிற தம்பிகள் என்மேலே வைச்சிருக்கிற நம்பிக்கை ஒரு முக்கிய காரணம். 'அண்ணன், கூப்பிட்டா வருவார்; தூங்கச் சொல்ற இடத்துலே தூங்குவார்; கொடுத்ததை சாப்பிடுவார்; நல்லாப் பேசுவார்'னு என்மேலே நம்பிக்கை வைச்சிருக்காங்க இல்லையா, அவங்களுக்காக பேசுகிறேன்.காங்கிரஸ், அ.தி.மு.க. தவிர அனைத்து இயக்க மேடைகளிலும் பகுத்தறிவு, நாத்திகம், இலக்கியம் எல்லாம் குறித்தும் பேசியிருக்கிறேன். இஸ்லாமிய, கிறித்தவக் கல்லூரியிலும் நாத்திகம் பேசியிருக்கேன். ஒரு கிறித்தவக் கல்லூரியில் பேசும்போது அங்கிருக்கிற மாணவிகள், ஜெபமாலை எடுத்து எனக்காக உருட்டுறாங்க. ஜெபமாலை உருட்டுறதை நிறுத்திட்டு நான் பேசறதை கொஞ்சம் கேளுங்கன்னு சொன்னேன். நிக்காம உருட்டுறாங்க. ஒரு சைத்தானை மேடையில் ஏத்திட்டாங்களேன்னு புலம்பிட்டே உருட்டுறாங்க. நீங்க எனக்காக ஜெபிக்கறீங்க, நான் உங்களுக்காக பேசறேன். இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்னு சொல்லிட்டு பேசிட்டுத் தான் வந்தேன்.அய்யா பெரியார் சொன்னமாதிரி இரண்டாயிரம் வருடத்துக்கு முன்னாடி எவனோ சொன்னதை நம்பறீங்க, நான் உங்க கண்முன்னாடி நிகழ்காலத்தில நடக்கிற நிஜத்தைச் சொன்னா நம்ப மாட்டேங்கறீங்களேன்னு தான் கேட்க வேண்டியிருக்குது. பூமி தட்டைன்னு எழுதிட்டான் பழைய ஏற்பாட்டில். அதன்படி பூமியைப் பாயாய் சுருட்டி கடல்ல போட்டான்னு இங்க ஒருத்தன் ஒரு கதை எழுதிட்டான். பூமி உருண்டைன்னு அறிவியல் நிரூபிச்ச பின்னாடி அவங்களால தாங்கிக்க முடியலை. சொன்னவனை கல்லாலே அடிச்சுக் கொன்னாங்க. இறந்துபோன போப் இரண்டாம் ஜான்பால்தான் தானே கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி இதுக்காக உலகத்துகிட்ட மன்னிப்பு கேட்டார். ‘கலிலியோவை கல்லால் அடிச்சுக் கொன்ன ஒரு மாபெரும் தவறை இந்த மதம் செய்து விட்டது. அதற்காக நான் உலகத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’. எத்தனை ஆண்டுகள் கழித்து மன்னிப்புக் கேட்டார்.அந்த மதத்தை எப்படி என்னால மன்னிக்க முடியும்? இந்தச் சமூகம், மதம் குறித்து நமக்குப் பல கேள்விகள் இருக்கு. பாவங்கள் மன்னிக்கப்படுதுன்னு சொல்றதே இந்த உலகத்தின் மிகப்பெரிய குற்றம். பாவங்கள் எப்படி மன்னிக்கப்படலாம்? பாவங்கள் செய்யக்கூடாது, தவறுகள் செய்யக்கூடாதுன்னு தானே நீங்க சொல்லணும். அது மன்னிக்கப்படுதுன்னு சொன்னா எவன் தவறு செய்யாம இருப்பான்? உலக கத்தோலிக்க திருச்சபை உட்பட அனைவரிடம் நான் பகிரங்கமா ஒருக் கேள்வியை வைக்கிறேன். ஒரு தடவை வருந்தி பாவமன்னிப்பு கேட்கிற, பாவங்களை ஒப்புக்கொடுக்கிற எந்தக் கத்தோலிக்க கிருஸ்த்தவனாவது அதன்பிறகு பாவங்களே செய்யலைன்னு சொல்ல முடியுமா? அடுத்த வாரம் வைக்கிற ஜெபவழிபாட்டிலும் அவன் பாவத்தை ஒப்புக்கொடுக்க வரத்தானே செய்யிறான். ஏன்னா இங்கு பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ஜார்ஷ் புஷ் ஈராக் மேல குண்டுவீசி அழிச்சுட்டு, பாவமன்னிப்பு கேட்டுட்டு போயிட்டே இருக்காரே? யார் போய்க் கேட்கிறது அவரை?கர்த்தர் மன்னிப்பார் அவனை, ரட்சிப்பார் இவனை. என்னத்தைக் கிழிப்பார்னு கேட்கிறேன் நான். பிறக்கிற ஒவ்வொரு மனிதனின் தலையிலயும் கடவுள் இவன் இத்தனை வருஷம் உயிரோட இருப்பார்னு எழுதியிருக்காராம். அப்ப இடையில கொல்ல நாம யாரு? நம் வாழ்நாளில் செய்யிற நியாய, அநியாயங்களுக்கேற்ப நாம சொர்க்க, நரகத்துக்கு போவோம், இறைவன் அங்கு இறுதித் தீர்ப்பை எழுதுவான்னு தான் எல்லா மதங்களும் சொல்லுது. அதை ஆழமா நம்புறாங்க. மதம் என்கிற கட்டிடமே இதை வைத்துத்தான் கட்டப்பட்டுள்ளது.கெட்டவன் தான் இறுதிநாளில் நரகத்துக்கு போவானில்ல, அப்புறம் எதுக்கு நாட்டில இத்தனை போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு வைச்சி நீங்க தண்டிக்கறீங்க? விட்டுடுங்க. எல்லாத்தையும் கடவுள் பார்த்துக்கட்டும். சதாம் உசேன் கெட்டவனா, இருக்கட்டும். அவன் நரகத்துக்கு போய் தண்டனை அனுபவிக்கட்டும். அல்லா அவனை பார்த்துக்கட்டும். இடையில் நீ எதுக்கு தூக்கில போடறே? அப்ப நீ மதத்தை நம்பலை. கடவுளையோ, சொர்க்கம் நகரம் இருக்கிறதையோ நீ நம்பலை. அதுதானே உண்மை.என் அருமை மக்களே! எது ஒன்றையும் போராடித்தானே பெற வேண்டியிருக்கிறது. ரேஷன்ல அரிசி போடலையா, தண்ணீர் வரலையா, பஸ் கட்டண உயர்வா, சாலை சரியா இல்லையா எல்லாத்தையும் போராடித்தானே வாங்க வேண்டியிருக்குது. அப்புறம் எதுக்கு பூஜை, புனஸ்காரம், கடவுள், கோவில்?நீங்க தீவிரமா மதங்களை மறுக்கிறவங்களா இருக்கீங்க. இதனால்தான், இந்துத்துவா கொள்கைகளைக் கடைப்பிடிக்கிற அதிமுகவுக்கு எதிரா கடந்த சட்டமன்றத் தேர்தல்லே பிரச்சாரம் பண்ணீங்களா?ஜெயலலிதா ஆட்சிக்கு வரக்கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக்கேன். அவங்களோட தமிழீழ எதிர்ப்பு ஒரு முக்கிய காரணம். இன்னொரு காரணம் ‘ஆட்டின் மூளைகூட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சிந்திக்கும். ஆரியமூளை ஒருபோதும் சிந்திக்காது’ங்கிறதுல நான் ரொம்ப உறுதியா இருப்பது. போன ஆட்சியில் நம் கொள்கைகளுக்கு ஒத்துவராத சட்டங்களைக் கொண்டு வந்தார்கள். அதில் ஒன்று மதமாற்ற தடைச்சட்டம். மதம் மாறுவதை எதுக்குத் தடை செய்யணும்? எனக்கு மதத்திலயோ, சாதியிலயோ நம்பிக்கை இல்லைன்னாலும் ஒருவன் மதம் மாறுவதைத் தடுக்க நீ யார்னு கேட்கறேன்.இங்க இருக்கிற கிறிஸ்தவனும், இஸ்லாமியனும் யாருன்னு இந்த ஜெயலலிதாவுக்கோ, பாரதீய ஜனதாவுக்கோ தெரியுமா? அப்துல்கலாம் என்ன பாபரோட பேரனா? ராமநாதபுரத்தில இருக்கிற இப்ராஹிமும், இஸ்மாயிலும் அக்பருக்கும், ஹூமாயினுக்கும் சொந்தக்காரனா? என் சொந்த அண்ணனும் தம்பியும்தானே அவங்க. அவன் ஏன் இஸ்லாமியன் ஆனான்? நீங்க சாதியக் கொடுமை பண்ணினீங்க. அவன் வெளியப் போனான். இஸ்லாத்துக்கு போனான், அவன் சுன்னத்தை பண்ணி இஸ்லாமியனா ஏத்துக்கிட்டான். ஆனா இங்க இருந்த வரைக்கும் நீங்க எங்களை கொடுமை தானே பண்ணிணீங்க. நீயும் இந்து, நானும் இந்து. ஆனா நீ ஐயர், நான் பறையன். இது ஏன்? இந்தக் கேள்விக்கு உங்கிட்ட என்ன பதில் இருக்குது?நாங்க எழுதிய ராமாயணமும், மகாபாரதமும் உனக்கு வேணும். நாங்க எழுதின கதையில் வரும் கற்பனை கதாபாத்திரமான ராமுனும், கிருஷ்ணனும் உங்களுக்கு வேணும். நாங்க மட்டும் வேணாம். நாங்க உள்ள வந்து மந்திரம் சொன்னா உங்க கடவுளுக்கு புரியாது, தீட்டுன்னா எங்களுக்குக் கோவம் வராதா? அனைத்தும் தெரிந்த கடவுளுக்கு தமிழ் மட்டும் தெரியாதா? ‘நான் உள்ளே வரக்கூடாது, நான் அர்ச்சகர் ஆகக்கூடாதுன்னா உங்க கடவுளே எனக்கு வேணாம்’ன்னு தான் அவங்க எல்லாம் வேறு மதத்துக்குப் போனாங்க.எந்த பார்ப்பான் ஐந்து ஏக்கர் நிலம் வைச்சு விவசாயம் பார்க்கறான்? உனக்கு சோறு எவன் போடறான்? இளையான்குடியில் வேலை பார்க்கிற எங்க அப்பனும் ஆத்தாளும் உனக்கு அனுப்பறான் அரிசியும், சோறும், வெங்காயமும், கத்தரிக்காயும். அதைத் தின்னுட்டு நீ மணியையே ஆட்டிட்டு இருந்தா என்ன அர்த்தம்? நான் கேட்கிறேன், கடவுளை வணங்குவது ஒரு தொழிலா? ஒரு மணிநேரம் வணங்கிட்டு வந்து வயக்காட்டுலே உழைடா. நீ மணியையே ஆட்டிட்டு இருந்தா உங்களுக்கு யாரு சோறு போடறது? வந்து வேலை செய். குறைஞ்சபட்சம் சுத்தியிருக்கிற செடிகளுக்காவது தண்ணியை ஊத்து. உழைக்காம சாப்பிடணும், எல்லாராலயும் மதிக்கப்படணுங்கிறதுக்காக வேஷத்தை போட்டுட்டு நீங்க எங்களை ஏமாத்தறீங்க. இன்னும் எத்தனை காலத்துக்குப் பொறுத்திட்டிருக்கிறது இந்த ஏமாத்து வேலையை?மதங்கிறது ஒருத்தனோட உரிமை. அவனுக்குப் பிடிச்ச மதத்தில் போய் இருக்கிறது அவனோட உரிமை. வறுமை, சாதியக் கொடுமை இதனால தான் ஒருத்தன் மதம் மாறுறான். பிடிச்சு எவனும் கர்த்தரை கும்பிடலை. எவன் பார்த்தான் கர்த்தர் வந்து இரட்சிச்சதை? ஆனால் அந்த மதத்தைச் சேர்ந்தவங்கதான் இவன் கஷ்டப்படும்போது ஓடிவந்தாங்க. கருமாத்தூர்ல அருளானந்தம் கல்லூரி கட்டினார். அதனால தான் ஐந்துகோவிலான் எம்.ஏ.படிச்சான். அமுல்ராஜ் வாத்தியார் ஆனான்.நீங்க என்ன பண்ணினீங்க? எங்களை பள்ளிக்கூடமே போகக்கூடாதுன்னு பயமுறுத்து வைச்சீங்க. படிச்சா நாயாப் போயிருவே, பேயாப் பிறந்துருவேன்னு பயமுறுத்தி வைச்சீங்க. கிறிஸ்துவப் பாதிரிகள் இவன் குஷ்டரோகியா இருந்தாலும் தொட்டுத் தூக்கினான், படிக்க வைச்சான். பால்பவுடர் கொடுத்தான். கர்த்தரை கும்பிடுன்னான். கும்பிட்டான். மதம் மாறினான். இதுல என்ன தவறு இருக்குது? மதத்தை சட்டம் போட்டுத்தான் காப்பாத்தணும்னா என்ன மயித்துக்கு அந்த மதம்? மதம் என்பது விரும்பி இருப்பது.இந்து மதம்னா என்ன, அது இங்க இருந்ததா, அது வெள்ளைக்காரன் எழுதினது. வெள்ளைக்காரன் நிர்வகிக்கும்போது இங்க இருக்கிற குறுநிலங்களை எல்லாம் ஒருங்கிணைச்சு அவன் தான் இந்தியான்னு பேர் வைக்கிறான். இந்தியாவில் உள்ள கிறித்தவன், இஸ்லாமியன், பார்சி போக மீதியுள்ளவன் இந்துன்னு அவன் தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில எழுதினான். அதுக்கு முன்னாடி இந்தியாவுலே மதம் இருந்தது. புத்தமதத்தை புத்தர் தோற்றுவிச்சார். அந்த மாபெரும் மேதையை அடிச்சு விரட்டுன ஒரு பாவத்துக்காவது இந்த இந்து மதம் அழிஞ்சு போகட்டுங்கிறேன் நான்.என் மண்ணில் தோன்றிய ஒரு மாபெரும் ஞானியை நீங்க துரத்திட்டீங்க. இன்னிக்கு இலங்கையிலயும், சிங்கப்பூர்லயும் புத்தர் இருக்கிறார். ஒலிம்பிக்கில் தங்கத்தை வாங்கிக் குவிக்கறான் அவன். அவனோட ஓடமுடியுமா உங்களால. ஏன்னா புத்த மதம் ஒழுக்கத்தை போதிக்குது, தியானம் சொல்லித் தருது, உடற்பயிற்சி கலைகளை, வீரக்கலைகளையும் பிறப்பில் இருந்து கத்துக்கச் சொல்லுது. அப்பேர்ப்பட்ட மதத்தைத் தோற்றுவித்த மகானை நாட்டை விட்டே துரத்திட்டு, பெத்லகேம்ல ஆசாரி வேலை பார்த்துட்டிருந்த இயேசுநாதரையும், அரபு நாட்டில பேரீச்சம்பழக் காட்டில ஒட்டகம் மேய்ச்சிட்டிருந்த நபிகளையும் கோவில் கட்டி கும்பிடறாங்க. என் மண்ணில் தோன்றிய புத்தமதம் உலகம் பூராவும் இருக்கு, என் மண்ணில் இல்லையே ஏன்? இவர்கள் (பார்ப்பனர்கள்) செய்த சதி. அவன் கடவுள் இல்லைன்னு போதிச்சான், அறிவே கடவுள்னு சொன்னான். அய்யய்யோ நம்ம பொழைப்புக்கு வேட்டு வைக்கிறான்னேன்னு பயந்துட்டு அவன் மதத்தை இந்தியாவிலே இருந்தே துரத்திட்டாங்க.சும்மா இந்து, இந்துன்னு குதிக்கக்கூடாது. சரி இருக்கட்டும். மதம் மாறின எல்லாரையும் மறுபடியும் இந்து மதத்துக்கே கூட்டிட்டு வருவோம். நீ எந்தச் சாதியில சேர்த்துப்ப? அப்பவும் தலித்தாத்தானே இருப்பான். அந்த மயித்துக்கு அவன் அங்கேயே இருந்துட்டுப் போகட்டுமே. உனக்கு இதில என்னப் பிரச்சனை? ஓட்டுப் போயிடும். அதுதானே காரணம்.இந்த மாதிரியான இந்துத்துவா கொள்கைகளோட இருக்கிற அதிமுகவை எப்படி மறுபடியும் ஆட்சியிலே உட்கார வைக்க முடியும்? அதனால்தான் நானும், அண்ணன்களும் அதுக்கு எதிரா பிரச்சாரம் பண்ணினோம்.கடந்த ஆட்சியின்போது தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்துலே தீவிரமாக இயங்கினீர்களே, அதைப் பற்றி சொல்ல முடியுமா?என் மொழியை மீட்டெடுக்கணும். மொழியை மீட்டுட்டா இன உணர்வு, மான உணர்வு எல்லாம் வரும். அறிவார்ந்த ஒரு சமூகமா இந்த சமூகத்தை மாற்றியாகணும். அறியாமை இருளில் இருந்து இந்த மக்களை மீட்டெடுக்கணும். எங்க கையில் தந்தை பெரியார் கொடுத்த அறிவுச்சுடர் இருக்குது. அவருக்குப் பிறகு அண்ணா, கலைஞர், எனக்கு முன்னாடி வீரமணி போன்ற அண்ணன்கள், எனக்கு சமகாலத்தோழர்கள் எல்லார் கையிலயும் அந்த அறிவுச்சுடர் இருக்குது. அதோட ஓடிட்டிருக்கோம். நான் சோர்வுறும்போது அதை என் தம்பிகள் கையிலயோ, தோழர்கள் கையிலயோ கொடுத்துடுவேன். அவங்க அடுத்து ஓடுவாங்க. இது ஒரு நெடுந்தூர ஓட்டம். இதன் லட்சியமே தேசம் முழுக்க இந்த அறிவுச்சுடரை பரவவிடுவது தான்.தமிழ் ஈழம் எங்களோட பிரதான இலக்கு. அதுக்காக போராட தலைவர் அங்க இருக்காரு. அந்தப் போராட்டத்தோட நியாயத்தை, தனிநாடு கேட்பதற்கான காரணத்தை உலக மக்களுக்கு எடுத்துச் சொல்றது தான் இங்கே இருக்கிற என்னை மாதிரியான ஆட்களோட வேலை. சாதாரணமா கேட்கிறான், ‘என்னப்பா பஞ்சம் பிழைக்கப் போன இடத்துலே தனிநாடு கேட்கிறீங்க’. அவனுக்கே மூணு மணி நேரம் பாடம் நடத்த வேண்டியிருக்கு. அவ்வளவுதான் இவன் அறிவு.தன் இன வரலாறு, தான் யாரென்றே தெரியாத நிலையில் தான் இந்த இனம் இருக்குது. சினிமாப் பாட்டை மனப்பாடம் செய்த நேரத்தில திருக்குறளை படிச்சிருந்தா இந்த இனம் என்னைக்கோ முன்னேறியிருக்கும். இன்னிக்கு ஒரு அரசியல் இயக்கம் இதைக் கையில் எடுக்குதுன்னா அது பா.ம.க.தான். இந்த மண்மேலயும், மக்கள் மேலயும், மொழியின் மீதும் அக்கறை இருக்கிற ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ் தான்.தமிழில் பேசுங்கன்னு அவர் சொல்றதும் இங்க எவ்வளவு கிண்டலுக்குரிய செய்தியா இருக்குது. மகிழ்ச்சின்னு ஒரு தமிழ்ச் சொல் இருக்குது சந்தோஷம்னு தான் சொல்றோம். காரியத்தை விசேஷம், சோறை சாதம், கோயிலை ஆலயம்னு சொல்றோம். இப்படி எல்லாத்திலயும் சமஸ்கிருதம் கலந்திருக்குது. இந்தக் கலப்பு பத்தாதுன்னு இங்கிலீஷ் கலப்பு வேற.பிரிட்டிஷ் மக்கள்கிட்டப் போய் தமிழில் பேசுங்கன்னு சொன்னா அது அயோக்கியத்தனம், கர்நாடகாவில் போய் தமிழ்ப் பெயர் வைங்கன்னு சொன்னா நான் இனவெறியன். என் சொந்த மக்கள்கிட்ட மம்மிக்கு பதிலா அம்மான்னு சொல்லுங்கடான்னு சொல்றது தப்புன்னா, இந்தக் கொடுமையை எங்க போய் சொல்றது?உலக மொழியெல்லாம் படி, வேண்டாம்னு சொல்லலை. கூடவே தமிழையும் படின்னு தான் சொல்றோம். வீட்டுக்குப் பல வாசல்கள், ஜன்னல்கள் இருக்கலாம். தலைவாசலா தமிழ் இருக்கட்டுங்கிறது தான் எங்களோட வேண்டுகோள்.சென்னை விமான நிலையம் தொடங்கி கன்னியாகுமரி வரை எத்தனை கடைகளோட பெயர் தமிழில் இருக்கு? தமிழ் எழுத்தை ஆங்கில உச்சரிப்பில் தான் எழுதறாங்க எத்தனை காலமா கெஞ்சறோம், கதறுறோம். யார்க்கிட்டே? சொந்த அண்ணன் தம்பிகிட்ட. கேட்க மாட்டேங்கிறானே? தமிழில் பெயர் வைக்காத கடைகளோட உரிமம் ரத்துன்னு சொன்னா ஒரே நாள்ல எல்லாமே மாறிடுமா, இல்லையா? இந்த இடத்தில நாம சர்வாதிகாரமாத் தான் இருக்கணும்.எவனுக்கும் அக்கறை இல்லை. தமிழ்லே பெயர் வைங்கன்னு சொன்னப்போ, எவ்வளவு கேவலமா பார்த்தாங்க? இதே விஷயத்தை என்னைத் தவிர வேற யாராவது சினிமாவுலே பேசியிருந்தா காலியே பண்ணியிருப்பாங்க. என்கிட்டே இவங்களுக்கு பயம் இருக்கு. ‘அவன் பெரிய முரடன். எது இருந்தாலும் வீடு புகுந்து அடிப்பான். எப்பவும் அவனைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கு’ன்னு பயப்படுறான். இல்லைன்னா எப்பவோ காலி பண்ணியிருப்பான்.எங்களோட கோரிக்கையிலே நியாயம் இருக்குதா, இல்லையா? நாம நினைச்சா ஒவ்வொரு வார்த்தையா மீட்டெடுப்பதன் மூலம் இன்னும் பதினைந்தே வருடங்களில் மொழியை மீட்டெடுக்க முடியும். ஆங்கிலம் படிக்காதேன்னு சொல்லலை. ஆங்கிலத்தில் மட்டுமே படிக்காதேன்னு தான் சொல்றோம். எங்க ஊர்ல கத்தரிக்காய் எப்படி பயிர் பண்ணனுங்கிறதை எதுக்கு ஆங்கிலத்துலே படிக்கணும்? நாம என்ன ஆஸ்திரேலியாவிலேயா போய் விவசாயம் பண்ணப் போறோம்? நான் எல்லாம் ஆட்சிக்கு வந்தா தமிழ் பேசாத ஒரு பத்துபேரை பொதுவிடத்தில் நிறுத்தி சுட்டுக் கொன்னுடுவேன். அதுக்குப் பிறகு எல்லாரும் தமிழ் பேசுவாங்க இல்லே? ஏன்னா இங்க உயிருக்கு மட்டும்தான் பயப்படுவான். இல்லைன்னா பணம் குடுங்க. இந்த இரண்டும் தான் வேலைக்காகும்.நீங்க திராவிட, மார்க்சிய, தமிழ்த்தேசிய இயக்கங்களோட மேடைகளில் பேசறீங்க. ஒரு பெரியாரிஸ்டா இவர்களின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?அய்யா அளவுக்கு நாம எதுவும் செய்திடலை. அவர் ஒரு தனிமனிதா செய்ததை இத்தனை இயக்கங்கள் சேர்ந்தும் செய்யலைன்னு தான் சொல்லுவேன். ஆனா இந்த இயக்கங்களும் இல்லைன்னா முள்மண்டிய ஒரு சுடுகாடா, மூடப்பழக்கங்களில் சிக்கின ஒரு நாடாத்தான் நம் நாடு இருக்கும். தமுஎச, DYFI, பெரியார் திராவிடர் கழகம் மாதிரியான இயக்கங்களில் இளைஞர்கள் சேரும்போது அவன் தறிகெட்டு போகாம நெறிப்படறதுக்கான வாய்ப்புகள் அதிகரிக்குது. அங்க மனித நேயம் போதிக்கப்படுது. என்ன சாதின்னு கேட்காம இணைச்சிக்குறாங்க. இருந்தாலும் இயக்கங்களோட இந்த வேகம் போதாது.மார்க்சிஸ்டுகளுக்கு இருக்கிற முக்கியப் பிரச்சனை வாக்கு அரசியல். அதனால தீவிரமான பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு போனா நிராகரிக்கப்படலாம்னு பயந்துட்டு மிக மெதுவா நகர்றாங்க. அதனால தான் அவ்வளவு பெரிய மார்க்சிய தத்துவம் இந்த மண்ணில் பின்தங்குது. எட்டு சீட்டுக்காக கையேந்த வேண்டிய நிலை இருக்குது. ஆனால் இந்த அரசியலும் இல்லைன்னா கூலி உயர்வு கேட்டுப் போராடற சிறு குழுக்களாத் தானே இருக்க முடியும்?என்னோட அடுத்த படத்துலே (வாழ்த்துக்கள்) ஒரு காட்சி வருது. ஒரு முதலாளி வீட்டுலே லெனின் படம் இருக்கும். முதலாளிகிட்டே ஒருத்தர் கேட்பார், ‘என்ன இவர் படமெல்லாம் இருக்கு?’. அதற்கு அவர் பதில் சொல்லுவார், ‘ஏன்டா எல்லா நாளும் நாங்க தொழிலாளியாவே இருக்கணுமா? நாங்க முன்னேறக் கூடாதா?’.தொழிலாளி முதலாளி ஆகும்போது தான் நினைக்கிற சமத்துவத்தைக் கொண்டு வந்துட முடியும். அதுக்கு அதிகாரம் தேவைப்படுது. அதிகாரம் கிடைக்கும்போது தான் நினைத்ததை அடைய முடியும். அதற்கு அரசியல் அவசியப்படுது. இல்லாம வெறும் போராட்ட அளவிலேயே நின்னுக்கிட்டுருந்தா மக்களுக்கு சோர்வு வந்துடும்.அதனாலே அரசியலுக்கு வந்தது பிழையில்லை. அரசியலுக்கு வந்த பின்னாடி அவங்க யாரும் கறைப்படவில்லையே. நல்லக்கண்ணு மாதிரி, மோகன் மாதிரியான இயக்க முன்னோடிகளுடைய எளிமை, இங்கே வேற யாருகிட்டே இருக்கு? ஆனாலும் அவங்களோட தீவிரம் பத்தாதுன்னுதான் எனக்குத் தோணுது.மார்க்சிய மேடையிலேயே கடவுள் இல்லைன்னு பேசின ஆளு நான் தான். தோழர்கள் அதிர்ச்சியாகி ‘என்ன இப்படி திடீர்னு பேசறீங்க, கொஞ்சம் கொஞ்சமாத் தான் சொல்லணும்’னாங்க. ‘எப்ப நான் செத்த பிறகா’ன்னு கேட்டேன். இத்தனை வருடம் இவர்கள் நாத்திகம் பேசாததே தவறு. மார்க்சிய மேடைகளில் கடவுள் இல்லைன்னு பகிரங்கமா சொல்லணும். அப்பதான் ‘கடவுள் இல்லைன்னா வேற என்ன இருக்கு’ன்னு யோசிப்பான். மனித இனம் எப்படித் தோன்றியது, இங்கிருக்கிற பொருட்கள் எப்போது தோன்றியது போன்ற மார்க்சின் சமூக விஞ்ஞானத்தை போதிக்காம எப்படி மார்சியத்தை வளர்க்க முடியும்?இன்னிக்கு சேகுவேராவும், பகத்சிங்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டியா இருந்திருக்க வேண்டாமா? ஆனால் இங்கே விஜய்யும், அஜீத்தும் தானே இளைஞர்களுக்கு வழிகாட்டி. காரணம் கம்யூனிஸ்ட்களோட நிதானப் போக்கு.இயக்கங்கள் தங்கள் செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து விரைவுபடுத்த வேண்டிய நேரமிது. ஒரு காட்டை அழிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டா ஒரேயடியா அழிச்சுடணும். ஒவ்வொரு மரமா வெட்டலாம்னு நினைச்சா ஒரு மரத்தை வெட்டி முடிக்கிறதுக்குள்ள அடுத்த மரம் துளிர்த்து விடும். அதுக்காக அவங்களோட பணியைக் குறைச்சு மதிப்பிடக் கூடாது. எவ்வளவோ பெரியத் தத்துவங்களை எல்லாம் கையில வைச்சிட்டு நாம மெதுவா பரிமாறுறோமோன்னு தோணுது. இன்னும் அதிகமா வேலை செய்தா சாதி, மதமில்லாத ஒரு சோஷலிச பூமியை சீக்கிரமா மீட்டுவிடலாம்.இவ்வளவு பெரிய கோபத்தோடும், கொள்கைகளோடும் இருக்கிற உங்களோட லட்சியம் கடைசிவரை சினிமாவா இருக்கிறதுக்கு வாய்ப்பே இல்லைன்னு தோணுது. சினிமாவுக்கு அடுத்து என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு பெண்ணை நேசிச்சேன். எனக்குத் தெரியும் அவங்களோட வாழ முடியாதுன்னு. ஆனா இன்னும் அவங்களை என்னால மறக்க முடியலை. அதுமாதிரிதான் விவரம் தெரியாத வயசிலேயே சினிமா மேல ஒரு ஆசை வந்திடுச்சி. நான் இந்த சினிமாவுக்கு பொருத்தமான ஆள் இல்லைன்னு இப்போது எனக்குத் தெரியுது. மானம், ரோஷம், சுயமரியாதை இருக்கிற எவனும் இந்தத் தொழிலுக்கு பொருத்தமானவன் கிடையாது.நான் எடுக்கிறது தான் சினிமா, அதை வாங்கி விக்கிறதுக்கு ஒரு குழு, அதைப் பார்க்கிறதுக்கு என் மக்கள் இப்படி ஒரு நிலை வந்தால் சினிமா ஒரு சுகமான தளமாக இருக்கும். அது இல்லாதபோதும் இதை விட்டுட்டுப் போக முடியலை. விட்டுட்டுப் போனா தோத்துட்டு போறான்னு சொல்லுவாங்க. அதனாலே இங்க இருந்துட்டே, இந்த ஊடகத்தை எப்படி என் மண்ணுக்கேத்த, மக்களுக்கேத்த ஊடகமா மாத்த முடியும்னு தான் யோசிக்கறேன். நானும் இங்க இல்லைன்னா ஒரு கலகக்காரன், கிளர்ச்சியாளன் இங்க இல்லை. என்னை மாதிரி நூறு பேராவது உருவாகிட்டா எனக்கு இங்கே வேலை இல்லை.தம்பி படத்தோட தணிக்கையில் ஒரு அதிகாரி, ‘அய்யய்யோ என்ன நீங்க ஏன் இவ்வளவு இடதுசாரி இருக்கீங்க? சே ஒரு தீவிரவாதி, அவரோட இயக்கங்களை உலக நாடுகள் தடை பண்ணியிருக்கு. அவரைப் போய் படத்தில காட்டியிருக்கீங்களே’ அப்படின்னார். ‘சே தீவிரவாதியாவே இருக்கட்டும். அவரை நெஞ்சிலத் தாங்கின என்னோட கதாநாயகன் யாரையுமே கொலை பண்ணலையே. இதில என்ன தப்பு’ன்னு கேட்டேன்.படத்துல ஒரு இடத்தில மயிருன்னு ஒரு வார்த்தை வரும். ‘ஒரு பெண் அதிகாரி இந்த மாதிரி வார்த்தையெல்லாம் பயன்படுத்தக்கூடாது, அதை எடுத்துடணும்’னு வாதம் பண்ணினாங்க. அவங்ககிட்ட கேட்டேன். ‘மயிரு என்ன அவ்வளவு கெட்ட வார்த்தையா’?‘ஆமா அநியாயத்துக்கு கெட்ட வார்த்தை’ன்னாங்க. ‘அப்புறம் எதுக்காக அதை அவ்வளவு நீளமா வளர்த்து கோவில்ல போய் காணிக்கையா குடுக்கறீங்க. மோசமான விஷயத்தை தான் கடவுளுக்கு தருவீங்களா, அப்படின்னா உங்க கடவுளை நீங்க அவ்வளவு கேவலமானவராத்தான் மதிக்கிறீங்களா’ன்னு கேட்டேன். அந்தம்மா பதிலே சொல்லலை. இந்த மாதிரி பல நெருக்கடிகளைத் தாண்டித்தான் ஒரு நல்ல படம் குடுக்க முடியுது. என்னை மாதிரி ஆட்களாலத் தான் இவங்களோட எல்லாம் போராட முடியுது.படத்தோட தயாரிப்பாளருக்கோ, நடிச்சவருக்கோ சே, மாவோ பத்தியெல்லாம் தெரியாது. தெரிஞ்சா படத்தை இயக்கியிருக்கவே முடியாது. இங்க ஒரு விஷயத்தை சொல்றதுக்குள்ள நம்மளை எவ்வளவு தளர்ச்சியடைய வைக்க முடியுமோ அவ்வளவு தளர்ச்சியடைய வைச்சி, வீரியமில்லாத ஆளா மாத்திடுவாங்க. தமிழ் வார்த்தைகளில் உரையாடல்கள் எழுதினாலே பார்க்கிறவன் சிரிச்சிடுவான் வேண்டாம்னு தடுத்துடுவாங்க. என் சொந்த மண்ணில், சொந்த மொழியில் படம் எடுக்கிறதுக்கே அவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்குது.இதையெல்லாம் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கு இப்ப சொற்ப பொருளாதாரத் தேவை இருக்கிறது. ஊரில் அம்மாவுக்கு ஒரு வீடு, என்னை சார்ந்திருக்கிற என் தோழர்கள், தம்பிகளுக்கான தேவைகள். எப்ப சீமான்கிட்ட போனாலும் வயிறார சாப்பிடலாம், காசுக் கேட்டா கடன் வாங்கியாவது தருவாங்கிற நம்பிக்கையில் என்கிட்ட வருகிறவர்களுக்கு உதவணும். இதுக்கெல்லாம் கொஞ்சம் பொருளாதாரம் தேவை. அதுக்காக இந்தத் தொழிலை செய்ய வேண்டியிருக்குது. இதிலும் என் கொள்கைக்கு விரோதமாக நடக்க வேண்டியிருந்தால் இதை விட்டுட்டு போய் பெட்டிக்கடை வைச்சிடுவேன். விவசாயம் செய்வேன், எதுவும் சரிவரலைன்னா சாராயம் கூட காய்ச்சுவேன். எப்படியும் பிழைச்சுக்கலாம். ஆனால் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது.இதைத்தவிர சினிமாவில் இருந்துட்டே மாற்று வேலைகள் செய்யும் எண்ணமும் இருக்கு. நல்லப் படங்கள் எடுக்கிற ஒரு தயாரிப்பாளரா மாறலாம். அதுக்கு முதலில் பணம் தேவை, சீமானை நம்பி யாரும் பணம் தரலாங்கிற நம்பிக்கையை உருவாக்கணும். இதைத்தவிர நான் செய்ய வேண்டிய சமூகப்பணிகள் நிறைய இருக்கிறது. பேச்சுதான் எனக்கு ஆயுதம். பேசிப் பேசியே இவங்களை மாத்தணும். யாரோ ஒருத்தரோட பேச்சு தான் என்னை மாத்தியிருக்கு. என் பேச்சும் நிச்சயம் சிலரையாவது மாத்துங்கிற நம்பிக்கையில் தான் என் பயணம் தொடர்கிறது. ...................
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment